யாழ்ப்பாணம் – நாவற்குழி கிழக்கு ஐயனார் கோவிலடியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலையடுத்து கைது செய்யப்பட்ட ஐவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த ஐவரையும் நேற்று சாவகச்சேரிப் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாவற்குழி கிழக்கு ஐயனார் கோவிலடியிலுள்ள வீடொன்றில் நேற்றைய தினம் குழந்தை பிறந்ததற்கான தொடக்கு கழித்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்த இரு குழுக்களுக்கிடையிலேயே நேற்றிரவு மோதல் இடம்பெற்றுள்ளது. மோதலின்போது வீடுகள் மற்றும் மோட்டார் வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் உட்பட எழுவர் நேற்றிரவு சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுள் ஆண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரிப் பொலிஸார், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து ஆண்களையும் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.
இதன்போதே குறித்த ஐவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





