வரதட்சணை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்தி, தற்கொலைக்கு தூண்டிய மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள காராவூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (27). இவருக்கும் ஜோதி (25) என்பவருக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களிலேயே கட்டிட தொழிலாளியான ரமேஷ் வேலைக்காக பெங்களூரு சென்றுள்ளார்.
ரமேஷின் தாயார் மல்லிகா(45) உடன் ஜோதி வசித்து வந்துள்ளார். ஜோதிக்கு அவரது திருமணத்தின் போது 6 பவுண் நகையும், ஒரு பைக்கும் வாங்கிக் கொடுத்துள்ளனர். இது தவிர 50,000 வரதட்சணை கேட்டு ஜோதியை, மல்லிகா கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
அவரது கொடுமை அதிகமானதால் மனமுடைந்த ஜோதி 2008ம் ஆண்டு டிசம்பர் 09ம் திகதி வீட்டின் அருகில் விளைநிலத்தில் இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக மல்லிகாவும், ரமேஷூம் கைது செய்யப்பட்டனர். பின்னர் ரமேஷ் விடுதலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், குற்றம் நிரூபிக்கப்பட்ட மல்லிகாவிற்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் 3 ஆண்டு சிறையும், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.





