வலது கண் துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

1734

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது.

அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர்.

உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும். ஆம், நல்லது கெட்டது நடப்பதற்கும், கண்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல், குருட்டுத்தனமாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள் துடிப்பதற்கு, உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.

அதுமட்டுமல்லாமல், கண்கள் துடிப்பதற்கு ம்யோகிமியா (myokymia) என்று பெயர். இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்களாகும். சிலருக்கு கண் துடிப்பானது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட இருக்கலாம்.

கண்கள் துடிப்பது ஏன்?

உடம்பில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில நேரங்களில் கண்களின் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும். இந்த கண்கள் துடிப்பிற்கு மயோகீமியா என்று மருத்துவ துறையில் கூறுவார்கள்.

குடிப்பழக்கம்,சோர்வு, கண்கள் வறட்சி, மன அழுத்தம், அதிக காபி குடிப்பது, சரிவிகித சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, அதிக நேரம் புத்தகம் படிப்பது போன்ற செயல்பாடுகள் கண்களின் ஆரோக்கியத்தைக் குறைத்து கண் துடிப்புகளை ஏற்படுத்துகிறது.

ஆனால் நீண்ட நாள் கண் துடிப்பு அல்லது வெட்டி இழுப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால், அது மூளை தொடர்பான கோளாறாகவும் இருக்கலாம்.

கண் துடிப்பை தடுப்பது எப்படி?

கண் துடிப்பினை தடுக்க, நன்றாக உறங்குவதுடன், கண்களுக்கு போதிய ஓய்வினைக் கொடுக்க வேண்டும். அல்லது கண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால், கண் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து கண் துடிப்பது நிற்கும்.