தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கொமெடி நடிகர் சதீஷ் அந்த ஆலையை மூட வலியுறுத்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால், இந்த ஆலையால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருவதாக கூறி பொதுமக்களும், மாணவர்களும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொமெடி நடிகர் சதீஷ் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘லண்டனில் இருக்கும் ஒரு தொழிலதிபர் அவுஸ்திரேலியாவில் இருந்து தாதுப்பொருளை, தூத்துக்குடிக்கு எடுத்து வந்து அதை சுத்த தாமிரமாக மாற்றி, அரசுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டு போவது தான் ஸ்டெர்லைட்.
இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கும் பிரச்சனை அல்ல, இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பை தொட்டியா..?’ என தெரிவித்துள்ளார்.





