கையை இழந்தாலும் தளராத நம்பிக்கையால் சாதித்த பெண்!!

678

அமெரிக்காவில் தனது இடது கையை இழந்த பெண்ணொருவர், அலைச் சறுக்கு விளையாட்டில் சிறந்த வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த அலைச் சறுக்கு வீராங்கனை Bethany Hamilton(28). இவர், தன்னம்பிக்கையால் சாதித்த பெண்மணியாக திகழ்ந்து வருகிறார்.

இவருக்கு 14 வயது இருக்கும் போது அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மிகப்பெரிய சுறா ஒன்று, இவரை தாக்கியதில் தனது இடது கையை இழந்தார்.

சுமார் 60 சதவித ரத்தம் இவரது உடலில் இருந்து வெளியேறியதால், Bethany உயிர் பிழைப்பதே கடினம் என்று மருத்துவர்கள் கருதினர்.

ஆனால், சற்றும் மனம் தளராத நம்பிக்கையை கொண்டிருந்த Bethany உயிர் பிழைத்தார். ஆனால், தனது பெற்றோர், தம்பிகள் போல அலைச் சறுக்கு வீராங்கனையாக வேண்டும் என்ற கனவை செயல்படுத்த முடியுமா என்ற எண்ணத்தில் இருந்துள்ளார் Bethany.

அவரைப் போலவே அனைவரும் நினைத்தனர். இந்நிலையில், ஒருநாள் கடற்கரையைப் பார்த்துக் கொண்டிருந்த Bethany, திடீரென தனது அலைச் சறுக்கு அட்டையை எடுத்துக்கொண்டு கடலுக்குள் இறங்கினார்.

இதனைக் கண்ட Bethany-யின் குடும்பத்தினரும், நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், தனது கையை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத Bethany, சில மணிநேர முயற்சிக்கு பிறகு ஒற்றைக் கையினால் விளையாடும் உத்தியைக் கற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, தினமும் கடுமையான பயிற்சி செய்த Bethany-க்கு மீண்டும் போட்டிகளில் கலந்து கொள்ளும் தைரியம் வந்தது.

அதன் பின்னர், உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்ட அவர் 5வது இடத்தைப் பிடித்தார். அதற்கு அடுத்த ஆண்டே தனது விடமுயற்சியால் முதலிடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தனது கையை இழந்த 4 ஆண்டுகளில் தொழில்முறை அலைச் சறுக்கு வீராங்கனையாகி, உலகத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் Bethany. அதன் பின்னர், கடந்த 2013ஆம் ஆண்டு ஆடம் டிர்க்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டு, இந்த தம்பதியருக்கு முதல் குழந்தை பிறந்த நிலையில், தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து Bethany Hamilton கூறுகையில்,

‘இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். எங்கள் வீட்டில் 4வது உறுப்பினர் வந்திருக்கிறார். மனைவியாகவும், தாயாகவும் இந்த நாட்களை மிகவும் மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கிறேன். எங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

‘Soul Surfer’ எனும் பெயரில் Bethany வாழ்க்கை திரைப்படமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.