இந்தியாவின் பாட்னா குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு குற்றவாளி, டெல்லி விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளான்.
பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் கூட்டம் நடந்த காந்தி மைதானத்தில் 7 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் 6 பேர் பலியாகினர், 82 பேர் காயம் அடைந்தனர்.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் தலா 3 குண்டுகள் வீதம் 18 குண்டுகளை வைத்திருந்தனர். அதில் 7 குண்டுகள் வெடித்தன. மீதமுள்ள குண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் அகற்றினர். இந்த சம்பவம் நடந்த உடன் பொலிசார் தவ்சீம், இம்தியாஸ் அன்சாரி ஆகிய 2 பேரை பாட்னாவில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இதையடுத்து பீகாரின் கிழக்கு சாம்பரன் மவாட்டத்தில் உள்ள அலாவ்லி கிராமத்தில் வைத்து அர்ஷத் அகமது என்பவனை உள்ளூர் பொலிசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று உஜ்ஜைர் அகமது என்ற குற்றவாளி ராஞ்சியில் கைது செய்யப்பட்டான்.
அவனுடைய உறவினரும் மற்றொரு குற்றவாளியுமான முகமது அப்சல் தனது மனைவியை பார்க்க இன்று டெல்லி விமான நிலையத்திற்கு வந்தான். அவ்வாறு வந்த இடத்தில் அப்சல் கைது செய்யப்பட்டான். அவனிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.





