நஞ்சற்ற விவசாயச் செய்கையை ஊக்கப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் பல்வேறு வகையான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று வவுனியா மாவட்டப் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் த.யோகேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக நஞ்சற்ற விவசாய நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டு வருகின்றோம். இன்றைய காலப்பகுதியில் அதிகளவான நஞ்சுள்ள பழவகைகள் மரக்கறிகள் நுகரப்படுவதால் மக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன.
எனவே நாம் அதன் முக்கியத்து வத்தை உணர்ந்து நஞ்சற்ற உற்பத்திகளை செய்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
மூன்று விதமாக நாம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். நஞ்சற்ற மரக்கறி உற்பத்தி செய்வதற்கு தேவையான உள்ளீடுகளை உற்பத்தி செய்தல், அவற்றை எவ்வாறு உற்பத்தி செய்வது என்ற ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்குதல், அதற்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தல் ஆகிய வழிகளில் மேற்கொண்டு வருகின்றோம்.
இதன் முதற்கட்டமாக 150 விவசாயிகளைத் தெரிவுசெய்து அவர்களிடம் இருந்து கிடைக்கின்ற மரக்கறி பழவகைகளை விற்பனை நிலையம் ஒன்றில் வகைப்படுத்தி விற்பனைசெய்து வருகின்றோம்.
எனினும் சரியான விளைச்சலை பெறுவதற்கான தரமான சேதனப் பசளைகள் மற்றும் மருந்துகளைப் பெறுவதில் கடும் சவாலை சந்திக்கின்றோம். எனவே எமது அடுத்த வேலைத்திட்டமாக அதற்கான குறித்த உள்ளீடுகளை உற்பத்திசெய்து அதனை விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்குவதற்கான பல வேலைத் திட்டங் களை மேற்கொள்ளவுள்ளோம்.
மேலும் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியினூடாக சேதன மரக்கறிச் செய்கையை ஊக்குவிப்பதற்காக 25 விவசாயிக ளுக்கு தேவையான கட்டமைப்புகளையும் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் நிதியாதாரங்களையும் வழங்கி வருகிறோம்.
தற்பொழுது ஒரு வருடமாக இந்தச் செயற்பாட்டை செய்வதுடன் எமது விற்பனை நிலையத்தில் உள்ள சேதன மரக்கறிகள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. எதிர்காலத்தில் அநேகமான மக்கள் பயனடையும் படியாக இதனை பரந்தளவில் செய்வதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளவுள்ளோம் என்று தெரிவித்தார்.






