ஆடுகளை காப்பாற்ற புலியுடன் சண்டையிட்ட வீரப்பெண்!!

557

இந்தியாவில் இளம்பெண்ணொருவர், புலியுடன் வெறும் குச்சிகளைக் கொண்டு சண்டையிட்ட சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ரூபாலி மேஷ்ராம்(23). இவர் மலையை ஒட்டிய பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார்.

இவரது குடும்பத்தினர் ஆடுகளை பராமரித்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த ரூபாலி மற்றும் அவரது தாய் இருவரும் வெளியே வந்துள்ளனர்.

அப்போது புலி ஒன்று, அங்கிருந்த ஆட்டைத் தாக்கிக் கொண்டிருந்ததை இருவரும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து, சற்று யோசனை செய்யாத ரூபாலி அருகில் கிடந்த குச்சியைக் கொண்டு புலியுடன் சண்டையிட தொடங்கினார்.

புலியின் தாக்குதலினால் ரூபாலிக்கு ரத்த காயம் ஏற்பட்டதை பார்த்த அவரது தாய், ரூபாலியை இழுத்து காப்பாற்றியுள்ளார்.

இந்நிலையில் கால்நடைகளையும் பாதுகாத்து புலியையும் அந்த வீரபெண் காப்பாற்றியுள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் வருவதற்குள் புலி அங்கிருந்து சென்றுவிட்டது.

இந்நிலையில், புலியின் தாக்குதலினால் காயமடைந்த ரூபாலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தலை, கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிர்ஷ்டவசமாக புலி அவரை கடிக்கவில்லை. ரூபாலியின் தைரியத்தை மருத்துவர்கள் வெகுவாக பாராட்டினர். இச்சம்பவம் தொடர்பாக ரூபாலியின் தாயார் கூறுகையில்,

‘புலியின் தாக்குதலில் எனது மகள் இறந்து விடுவாள் என எண்ணினேன். அவளை பார்க்க பயமாக இருந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட புலியுடன், வெறும் குச்சிகளை கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்’ என தெரிவித்துள்ளார்.