சவுதியில் எறும்பு கடித்து உயிரிழந்த கேரள பெண் : அதிர்ச்சி சம்பவம்!!

452

சவுதியில் விஷ எறும்பு கடித்ததில் கேரளாவை சேர்ந்த பெண் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட சுசி ஜெபி (36) என்ற பெண் சவுதியின் ரியாத்தில் தனது கணவர் ஜெபி மேத்யூவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 19-ஆம் திகதி சுசி, வீட்டில் இருந்த போது அவர் உடலில் எறும்பு ஒன்று கடித்துள்ளது. அந்த எறும்பை பார்த்த மேத்யூ அதை பிடித்து தூர வீசியுள்ளார்.

இதன்பின்னர் சுசியின் உடல் வீக்கமடைய தொடங்கியதுடன், மூச்சு விடவும் சிரமப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனை உள்ள சுசி உடனடியாக ரியாத்தில் உள்ள ஓபியிட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சுசி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், சுசி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போதே அவரின் ரத்த அழுத்தமும், நாடி துடிப்பும் குறைவாக இருந்தது.

சுசியின் கணவர் எறும்பை பார்த்தாக கூறினார், ஆனால் அவர் உடலில் எறும்பு கடிக்கான எந்த தழும்பும் இல்லை.

சில வாரங்களுக்கு முன்னர் கூட இதே போன்ற பிரச்சனையோடு ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவரையும் காப்பாற்ற முடியவில்லை என கூறியுள்ளனர்.

சுசி ஆஸ்துமாவுக்காக எடுத்து வந்த சிகிச்சை முறைகள் குறித்து முழு தகவலும் வெளிவராத நிலையில், சில விஷத்தன்மை கொண்ட எறும்புகள் கடித்தால் இது போன்ற உடல் அலர்ஜி கொண்டவர்களின் உயிரை கூட அது பறிக்கும் என தெரியவந்துள்ளது.