பாகுபாடு காட்டிய யூடியூப் : துப்பாக்கிச் சூடு நடத்திய பெண்!!

313

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட பெண் குறித்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்திலுள்ள யூடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் 3 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அப்பெண் தன்னை தானே சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்டார்.

குறித்தபெண் யார் என்ற தகவல் இதுவரை தெரியாத நிலையில் அப்பெண் குறித்த தகவலை அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

சன் டியாகோ மாகாணத்தில் வசித்து வந்த 36 வயதான நசீம் அக்தாம் என்பவர் தான் குறித்த தாக்குதலை முன்னெடுத்தவர்.

குறித்த நபர் உடற்பயிற்சிகள், பாரசீக கலாச்சாரம், சைவ உணவு உள்ளிட்டவற்றை யூடியூப்பில் வீடியோவாகப் பதிவிட்டு வந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் வெளியிட்டுள்ள ஒரு காணொளி பதிவில், அவருடைய வீடியோவுக்கு யூடியூப் நிறுவனம் பாகுபாடு காட்டியதாகவும், பெரும்பாலான வீடியோக்கள் பார்வையாளர்களைச் சென்றடையாமல் யூடியூப் நிறுவனம் செய்ததாக தனது NasimeSabz.com என்ற பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

மேலும் அதில் யூடியூப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் விளம்பரப் பணத்தைச் சுரண்டுவதாகவும் யூடியூப் சமமான வளர்ச்சியை அளிப்பதில்லை போன்ற பதிவுகள் இடம் பெற்றிருந்தன.

மட்டுமின்றி மிருகவதை தடுப்பு குறித்தும் அவர் பல்வேறு காணொளிகளை பதிவேற்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை யூடியூப் கணக்கை அவர் செயலிழக்கச் செய்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

யூடியூப் நிறுவனத்தின் மீது இருந்த கோபத்தினால் நசீம் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று அவரது தந்தையும் விசாரணை அதிகாரிகளிடம் கூறி இருக்கிறார்.

தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விசாரணை அதிகாரிகள் இது தீவிரவாத தாக்குதல் அல்ல என்று கூறியுள்ளனர்.