தமிழகத்தில் கோவில் குருக்களை கட்டிப் போட்டு அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் குருக்களாக இருப்பவர் பிரபு. இவருக்கு பிரியா(24) என்ற மனைவி உள்ளார்.
இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் கழிந்தும் குழந்தைகள் இல்லை. சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர் நேற்று காலை 6.15 மணியளவில் வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறையில் மோசமான காயங்களுடன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரின் கட்டை அவிழ்த்துவிட்டுவிட்டு, அவரின் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது பிரியா வீட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது பிரியாவின் கழுத்தில் இருந்த தங்க நகை காணாமல் போயிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து விசாரித்த போது, பிரியா நகைக்காகவே கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளனர். குருக்கள் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பிரியாவை தாக்கி அவரிடமிருந்த நகையை பறிக்க முயன்றுள்ளனர்.
உடனடியாக குருக்கள் அவர்களை தடுக்க முயற்சித்த போது, கொள்ளையர்கள் அவரை தாக்கி வெளியில் கட்டிப் போட்டுள்ளனர் என்பதை அறிந்துள்ளனர்.






