விளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் : தனுசு!!

2


தனுசு ராசி வாசகர்களே, நல்லதோ அல்லதோ முடிவெடுத்துவிட்டால் முன்வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்லவர் நீங்கள். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 03.10.2018 வரை உங்களின் ராசிநாதன் குரு பகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கோவில் கும்பாபிஷேகத்துக்குத் தலைமை தாங்குவீர்கள். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள்.


எங்கே சென்றாலும் வரவேற்பு அதிகரிக்கும். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் கனவுத் தொல்லை, தூக்கமின்மை நிலவும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக்கொள்வது நல்லது.

13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி ராசிக்குள்ளேயே வந்தமர்வதால் சில நேரத்தில் நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். திட்டவட்டமாகச் செயல்பட முடியாமல் தடுமாறுவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலை தூக்கும்வருடப் பிறப்பு முதல் 12.02.2019 வரை ராகு 8-ம் வீட்டிலும் கேது 2-ம் வீட்டிலும் நிற்பதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் வரும். இருவரும் நிதானித்துப் போவது நல்லது. 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை கேது ராசிக்குள் நுழைவதால் முன்கோபம் வந்து நீங்கும்.

உடல் நலம் பாதிக்கும். அதிக அளவில் காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ராகு 7-ல் நுழைவதால் குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்துப் போங்கள். சிலர் கணவன் மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்தக்கூடும்.


இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் சிலர் புது மனை புகுவீர்கள். என்றாலும் ஜென்மச் சனியாகத் தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். வாயு பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று நடந்துகொள்வார்கள்.

30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதரர், சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து போங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.


21.04.2018 முதல் 14.05.2018 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். கடன் பிரச்சினை தலைதூக்கும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் செலவினங்கள் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சூரியன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். படிப்பின் பொருட்டு அவர்களைக் கசக்கிப் பிழிய வேண்டாம். விட்டுப் பிடிப்பது நல்லது.

பூர்விகச் சொத்துப் பிரச்சினையை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களால் வீண் செலவும் மனக்கசப்பும் வந்து போகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் ஆனி, ஆடி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அசல் வந்தால் போதும் என்று நினைத்திருந்த உங்களுக்குக் கணிசமாக ஆதாயம் உண்டாகும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்ட வேண்டாம். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுக்காதீர்கள்.

வேலையாட்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு ஆனி, ஆடி மாதங்களில் கிடைக்கும். அவ்வப்போது உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். மேலதிகாரியுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். உடன் பணிபுரிபவர்களை விமர்சித்துப் பேச வேண்டாம்.

இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் சின்னச் சின்ன இடர்பாடுகள் தந்தாலும், தைரியமாக எதிர்கொண்டு பிற்பகுதியில் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: மதுரை மாவட்டம், திருநகர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவரசித்தி விநாயகரை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.