விக்ரமுடன் பேச ரொம்ப பயந்த ஏமி ஜக்சன்!!

481

emiமதராசப்பட்டணம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஏமி ஜக்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகையான ஏமி ஜக்சன் விக்ரமுடன் இணைந்து தாண்டவம் என்ற படத்திலும் நடித்தார். தற்போது விக்ரமுடன் மீண்டும் இணைந்து ஐ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார்.

கடந்த 18மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளில் சுற்றித்திரிந்த இந்த வெளிநாட்டுப் பறவை தற்போது தீபாவளிக்காக சென்னையில் வந்து செட்டிலாகியுள்ளது. ஐ படத்தை பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறும்போது

இயக்குனர் ஷங்கர் பற்றி…?

ஷங்கர் சார் படத்துல நடிக்கிறது பெரிய விஷயம். அதுவும் என்னோட 3வது படத்திலேயே அந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சது ரொம்ப பெருமையா இருக்கு. இதுல நடிச்ச அனுபவம் நல்லா இருந்தது. நிறைய விஷயம் கத்துக்கிட்டேன். ஷங்கர் சாருக்கு என்ன வேணுங்கிறது அவருக்கு நன்றாகவே தெரியும். இந்த கதையாகட்டும், கதாபாத்திரமாகட்டும் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. இதில் நடிக்க எனக்கு சந்தோஷமாக இருந்தது.

நடிகர் விக்ரம் பற்றி….?

விக்ரம்கூட நடிக்கிறது அருமையான விஷயம். அவர் எதார்த்தமானவர். ஏற்கெனவே அவர்கூட தாண்டவம் படத்தில் நடிச்சிருக்கேன். இயக்குனர் விஜய்தான் விக்ரமை என்னிடம் அறிமுகப்படுத்தினார். அவரிடம் முதலில் பேச ரொம்பவும் பயந்தேன். அவர் ரொம்ப இயல்பாக என்னிடம் பேசினார். அவருடன் நடிப்பது எனக்கு ரொம்ப சௌகரியமாக இருக்கிறது. அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். விக்ரம் சார் ஒவ்வொரு படமும் வித்தியாசமா பண்ணுகிறார். நெகட்டிவ் கதாபாத்திரமானாலும், ஹீரோ கதாபாத்திரமானாலும் ரொம்பவும் சிரமம் எடுத்து பண்ணுகிறார். அவரைப் பார்த்தாலே நாமும் அவரைப்போல் நடிக்கணும்னு தோணும்.

ஐ படத்தைப் பற்றி..?

படத்தை பற்றி ரொம்பவும் சொல்ல விரும்பலை. ஆனா, நீங்க விரும்புகிற விஷயம் இந்த படத்தில் கண்டிப்பாக இருக்கும்.

ஐ படத்துல உங்களோட ஆடை அலங்காரம் பற்றி..?

ஷங்கர் சார் படம்னாலே ஆடை அலங்காரம் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கும். இந்த படத்தில் 6 பாடல்கள் இருக்கு. எல்லா பாடலும் வித்தியாசமாக வந்திருக்கிறது. பி.சி.ஸ்ரீராம் அதை நன்றாக படமாக்கியிருக்கிறார். பாஸ்கோ நடனம் அமைத்துள்ளார். நிறைய காட்சிகள் பார்ப்பதற்கு ரொம்பவே பிடிக்கும்.

இந்த படத்தில் உங்களுடைய கதாபாத்திரம்..?

இந்த படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம். ஷங்கர் சார் கதை சொல்லும்போதே என் கதாபாத்திரம் தியா என்று சொன்னார். அந்தக் கதையை கேட்டவுடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். இதுவரை பார்த்ததைவிட இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக என்னைப் பார்க்கலாம்.

தீபாவளியை எப்படிக் கொண்டாடப் போறீங்க…?

கடந்த 3 வருடமாக இந்தியாவில் இருக்கிறேன். ஆனால், இப்போதுதான் சென்னையில் தீபாவளிக்கு இருக்கிறேன். விடுமுறைக்காக அப்பாவும், அம்மாவும் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களோடு தீபாவளி கொண்டாடுவதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். அவர்களுக்காக நானே சமைக்கப் போகிறேன். பெற்றோருடனும், நண்பர்களுடன் இந்த தீபாவளியைக் கொண்டாடப் போகிறேன்.