ஆல் இன் ஆல் அழகுராஜா படத்துக்கு வரிவிலக்கு அளித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவடிவேலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது..
நடிகர் கார்த்தி, நடிகை காஜல் அகர்வால் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தை ஸ்டூடியோ கிரீன் படநிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். 2ம் திகதி இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்தப் படத்துக்கு 29.10.2013 அன்று வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளளது.
தமிழக அரசிடம் தயாரிப்பளார் கொடுத்துள்ள விண்ணப்பத்தில் படத்தின் பெயர் அழகுராஜா என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் விளம்பரங்கள், போஸ்டர்களில் ஆல் இன் ஆல் அழகுராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆல் இன் ஆல் என்ற ஆங்கிலப் பெயரை மறைத்து அரசை ஏமாற்றி தமிழ் பெயருக்கு உரிய வரிச்சலுகையை தயாரிப்பாளர் பெற்றுள்ளார்.
இதனால் அரசுக்கு 18 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, படத்துக்கு அரசு வரிவிலக்கு அளித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியயிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்தயநாராயணா முன்னிலையில் வசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் சுந்தரேசன், ஜோயல் ஆகியோர் ஆஜரானார்கள்.
ஆல் இன் ஆல் அழகுராஜா படத்துக்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து அரசு முதன்மை செயலாளர், வணிகவரித்துறை கமிஷனர், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் வருகிற 7ம் திகதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே இன்று வெளியான விளம்பரங்களில் ஆல் இன் ஆல் என்ற ஆங்கில வார்த்தை மட்டும் நீக்கப்பட்டு அழகுராஜா என்ற வார்த்தை மட்டும் இடம் பெற்றுள்ளளது.





