வவுனியாவில் கூட்டமைப்பின் கையை மீறிப்போகும் நிலையில் தவிசாளர் பதவியை கைப்பற்றினோம்!!

368

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையை மீறிப் போகும் நிலை காணப்பட்டதாலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியானது தவிசாளர் பதவியை கைப்பற்றியது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபையின் தவிசாளர் பதவியை கைப்பற்றியமை தொடர்பாக நேற்றுமுன்தினம் (16.04) செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக கட்சிகளின் நகர்வுகளை அவதானித்து ஒவ்வொரு கட்சிகளும் பெற்றிருக்க கூடிய ஆசனங்களை சரியான முறையில் கணிப்பீடு செய்து பார்த்ததில் நாங்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்டது.

ஆரம்பத்தில் எமது கட்சியானது நடுநிலை வகிப்பதாகவே முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் நடுநிலை வகிப்பதன் ஊடாக தவிசாளர் தெரிவு என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கையை மீறிப் போகும் நிலைமை காணப்பட்டதால் நாங்கள் எமது கட்சி சார்பிலே இராசலிங்கம் கௌதமன் என்பவரை தவிசாளர் பதவிக்காக முன்னிலைப்படுத்தினோம்.

கட்சியின் தீர்மானத்தின்படி தமிழர் விடுதலைக் கூட்டணி நடுநிலை வகித்திருந்தால் வவுனியா நகரசபையின் தவிசாளர் பதவியானது வேறு ஒரு கட்சிக்கு சென்றிருக்கும்.

அத்துடன் நாங்கள் நடுநிலை வகித்த காரணத்தினால் தான் தவிசாளர் பதவியானது கிடைக்காமல் போனது என்ற குற்றச்சாட்டிற்கு நாங்கள் ஆளாக நேரிடும் எனவே மிகவும் அவதானமாக பலதரப்பட்டவர்களின் கருத்துக்களை நாங்கள் கேட்டறிந்ததன் அடிப்படையிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த முடிவை எடுத்திருந்தது என தெரிவித்தார்.