மனைவியின் தோழியை கொன்றுவிட்டு ஊர்சுற்றிய நபர் : பரபரப்பு வாக்குமூலம்!!

402

 

தமிழ்நாட்டில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி மறைத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சூளைமேட்டில் வசித்தவர் வேல்விழி (19). விருதாச்சலத்தை சேர்ந்த இவர் நர்சிங் டிப்ளமோ படிப்பு படிப்பதற்காக சென்னையில் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 6ம் திகதி தனது தந்தையுடன் கடைசியாக பேசிய வேல்விழி பின்னர் அவரை தொடர்பு கொள்ளவில்லை.

தந்தை போன் செய்தபோது வேல்விழி போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் பதற்றமடைந்தவர், சென்னை வந்து வேல்விழி தங்கியிருந்த இடத்தில் விசாரித்த போது அவரை பார்க்கவில்லை என அனைவரும் கூறினர்.

இதையடுத்து அவர் பொலிசில் புகார் அளித்தார். பொலிசார் விசாரணையை தொடங்கிய நிலையில் வேல்விழியுடன் நர்சாக பணியாற்றும் மகாலட்சுமி என்பவரின் கணவர் அஜித்குமார் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அஜித்குமாரிடம் பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் வேல்விழியை தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அஜித்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், வேல்விழியை கொன்று அவர் உடலை சாக்குமூட்டையில் வைத்து வாடகை ஆட்டோ பிடித்து கோயம்பேடு கொண்டுச் சென்றேன்.

அங்கு மின்சார கேபிள்களை சுற்றும் பெரிய உருளை இருந்தது, அதன் இடையில் உள்ள இடைவெளியில் மூட்டையை திணித்துவிட்டு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து வேல்விழியின் சடலத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

வேல்விழியை கொன்றதற்கான காரணம் குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேரளாவை சேர்ந்த அஜித்குமார் தனது மனைவி மகாலட்சுமியுடன் மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் சென்னை வந்துள்ளார்.

மகாலட்சுமி நர்சாக பணிபுரியும் இடத்தில் அவருடன் வேல்விழியும் பயிற்சி நர்சாக பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றிய அனைவரும் சூளைமேட்டில் ஒரே குடியிருப்பில் தங்கியுள்ளனர்.

சோம்பேறியான அஜித்குமார் வேலைக்கு போகாமல் ஊர்சுற்றி வந்த நிலையில், இரண்டு மாதம் அங்கே இங்கே கடன் வாங்கி மனைவியிடம் சம்பளம் என்று கொடுத்துள்ளார்.

மூன்றாம் மாதம் சம்பளமாக கொடுக்க ரூமில் தனியாக இருந்த வேல்விழியிடம் பணம் கடன் கேட்டபோது, அவர் தரவில்லை. கழுத்தில் உள்ள செயின் அல்லது செல்போனை கொடு என்று கேட்டபோது தரமறுத்த வேல்விழி, அஜித்குமாரை திட்டி வெளியே போகச்சொல்லி இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி வேல்விழியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. வேல்விழியை கொன்றபின்னர் அவர் கழுத்தில் இருந்த செயினை திருடி நகைக்கடையில் விற்று சம்பளம் என மனைவியிடம் கொடுத்துள்ளார். மீதிப்பணத்தை அஜித்குமார் ஜாலியாக செலவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.