இலங்கையில் நடந்த கொடுமை : தண்டனைக்காக மனு கொடுத்த இலங்கை அகதியின் அவலநிலை!!

578

தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்காக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, தண்டனை பெற்றுத்தருமாறு இலங்கை அகதி ஒருவர் இராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.

இலங்கையிலுள்ள வயதான தன் தந்தையுடன் இறுதிக்காலத்தை கழிக்க இலங்கை செல்ல வேண்டும் என்பதற்காகவே இவர் தன் மீதான வழக்கை விரைவில் முடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சிலாபம் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய கஜேந்திரநாத் (டேவிட்) என்ற நபரே மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கையில் நடந்த விபத்தில் காயமடைந்த கஜேந்திரநாத்திற்கு இரத்தம் ஏற்றியபோது அதன்மூலம் எச்.ஐ.வி கிருமி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் எச்.ஐ.விக்கு முறையான சிகிச்சையளிக்க மருத்துவ வசதி கிடைக்காத காரணத்தினால் கடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக படகில் தமிழகம் சென்றுள்ளார். இவ்வாறு சென்றவரை மண்டபம் பொலிஸார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்து பின்னர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

வெளியில் வந்த கஜேந்திரநாத் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி வைத்தியசாலையில் எச்.ஐ.வி. பாதிப்பிற்கு வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

தங்க இடம் இல்லாததால் வைத்தியசாலை வளாகத்தில் தங்கியுள்ள கஜேந்திரநாத் தனக்கு இலங்கை அகதிகள் முகாமில் இடமளிக்குமாறு நெல்லை கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்றும் அளித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கையில் வயது முதுமையால் அவதிப்படும் தந்தை சண்முகநாதனுடன் இறுதிக்காலத்தை கழிக்க விரும்பியுள்ளார். ஆனால் கள்ளத்தனமாக இந்தியா வந்த குற்றத்திற்கு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், சிகிச்சைக்காக சட்டவிரோதமாக படகில் வந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தன் மீதான குற்றத்திற்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தண்டனை வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்கினால் வழக்கை விரைவாக முடித்து இலங்கை சென்று தந்தையின் இறுதிக்காலத்தில் துணையாக இருக்க முடியும் என்ற காரணத்தினாலேயே மனு கொடுத்துள்ளார்.

இந்த கோரிக்கைக்காக இராமநாதபுரத்திற்கும், சிகிச்சைக்காக நெல்லைக்கும் தினமும் அலையாய் அலைந்து திரிந்து வருவதாகவும், தங்க இடமின்றி தவிப்பதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும், உடனடியாக தன் மீதான குற்றத்திற்கு விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், அதுவரை தனக்கு தங்கியிருப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கஜேந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.