சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய பிரதி அமைச்சர் : நெகிழ்ச்சியான சம்பவம்!!

304

கம்பஹா – கனேமுல்ல பகுதியில் சந்தலி சமோத்யா சத்சரணி என்ற பாடசாலை மாணவி கல்வி பயில கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஊடாக பாடசாலை ஒன்றை பெற்றுக்கொடுக்க பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த சிறுமிக்கு, அவர் கல்வி கற்று வந்த பாடசாலை அதிபர் மற்றும் வகுப்பாசிரியர் ஆகியோரால் பெரிய அநீதி இழைக்கப்பட்டு வந்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க,

“மிகவும் திறமையான மாணவியான இந்த சிறுமி வகுப்பில் எப்போது முதலாம் இடத்தையே பெற்று வந்துள்ளார். மருத்துவராக வர வேண்டும் என்பதே அவரது கனவு. இந்த பிள்ளைக்கு நேர்ந்த அநீதி குறித்து கேட்டபோது எனக்கு முதலில் நினைவுக்கு வந்தவர், மனிதநேயமிக்க அமைச்சர் அகில விராஜ்காரியவசம்.

இதற்கு முன்னரும் இப்படியான பிள்ளைகள் குறித்து அறிந்து நான் அமைச்சரை தொடர்பு கொண்ட சந்தர்ப்பங்களில் அந்த பிள்ளைகளுக்கு கல்வி கற்க பாடசாலை மட்டுமல்லாது, கொடுப்பனவுகளையும் அவர் வழங்கியுள்ளார். அத்துடன் சில பெற்றோருக்கு வீடுகளை தேடிக்கொடுத்து அதற்கான வாடகையையும் செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்று காலையும் நான் அமைச்சரை தொடர்பு கொண்டு குறித்த மாணவி தொடர்பில் தெரிவித்து “ நான் வரவா?” எனக் கேட்டேன். அதற்கு, காலம் தாழ்த்தாது உடனடியாக வருமாறு கூறினார். இவ்வாறுதான் தற்போது கல்வியமைச்சில் பணிகள் சிறப்பாக நடக்கின்றன.

அத்துடன் இந்த பிள்ளையின் தந்தைக்கும் பாடசாலையில் தொழில் ஒன்றையும் அமைச்சர் பெற்றுக் கொடுத்துள்ளார். இதனால், கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக” குறிப்பிட்டுள்ளார்.

“எமது சமூகத்தில் இப்படியான பல குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு எதிராக சமூக வலைத்தங்களில் தவறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அமைச்சர் அவற்றுக்கு எதிராக பேசினார். அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில், அந்த குழந்தைகளுக்கு பாடசாலைகளை பெற்றுக்கொடுத்துள்ளீர்கள்.

இன்றும் இந்த பிள்ளையின் பெற்றோர் வழங்கிய கடிதத்தை நான் உங்களிடம் கையளிக்கின்றேன். உறுதியளித்ததை போல் நீங்கள் செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன். அமைச்சருக்கு மிக்க நன்றி” எனவும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கனேமுல்ல பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற மாணவியின் தாய் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் பாடசாலையின் ஆசிரியர், அதிபர் மற்றும் ஏனைய மாணவர்களின் பெற்றோர்கள், குறித்த மாணவிக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு வெளியிட்டதுடன், அந்த மாணவி பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்திருந்தார். இந்த மாணவிக்கே பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.