வவுனியாவில் அழிவடைந்து வரும் தமிழர்களின் சான்றுப் பொருட்கள்?

673

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் ஒலுமடு கிராமத்தில் இருந்து சுமார் 03 கிலோ மீற்றர் தூரத்தில் வெடுக்குனாரி மலைப்பிரதேசத்தில் தமிழர்களுடையதாக நம்பப்படும் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பல சான்றுப் பொருட்கள் அழிவடைந்து செல்லும் நிலையில் காணப்படுவதோடு அங்குள்ள ஆதி சிவன் ஆலயமும் அடிப்படை வசதியின்றி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வன வளம் சூழ்ந்த வன்னிப்பிரதேசத்தில் பல்வேறு தொல்லியல் பொருட்கள் காணப்படுகின்ற நிலையில் பெரும் காடுகளின் நடுவே காணப்படுகின்ற இவ் வெடுக்குனாரி மலையானது குகைகளையும் கேணிகளையும் கொண்டு அமைந்துள்ள ஒரு புராதன இடமாக காணப்படுகின்றது.

நீண்ட காலங்களிற்கு முன்னர் இப்பகுதியில் நாகர்கள் வாழ்ந்ததாக நம்பும் இப்பகுதி மக்கள் யுத்த நிறைவிற்கு பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது பல இந்து தெய்வங்களை வைத்து வழிபடுகின்றார்கள்.

நிலத்தில் இருந்து சுமார் 300 அடி உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியில் ஆதி சிவன் பிரதிஸ்டை செய்யப்பட்டதோடு பாம்பின் தலைப்பகுதி போன்ற தோற்றம் உள்ள மலைப்பகுதி ஒன்றின் கீழ் நாக சிலையையும் பிள்ளையார், முருகன், வைரவர், ஐயனார் போன்ற தெய்வங்களை பிரதிஸ்டை செய்து விசேட தருனங்களில் வழிபட்டு வருகின்றனர்.

எனினும் இப்புராதன இடத்திற்கு செல்வதற்கு சீரான வீதியின்மையால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளும் மக்கள் நீர் வசதியின்மை மற்றும் மலைகளில் ஏறுவதற்கான படிக்கட்டுக்கள் இன்மையாலும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றார்கள்.

இதேவேளை மலைப்பகுதியில் காணப்படுகின்ற தமிழ் பிராமி எழுத்துக்களும் குகை பகுதியும் பாதுகாக்கப்படாமையால் அழிவடைந்து செல்லும் நிலைக்கு செல்வதாக இவ்விடத்தை தற்போது பரிபாலித்து வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே வடமாகாணசபையும், வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர் தொல்லியலை எடுத்தியம்பும் இப்பிரதேசத்தை பாதுகாப்பதற்கும் வேறு பிரதேசங்களில் இருந்து மக்கள் பார்வையிட்டும், இவ்வாலயத்தை தரிசித்து செல்வதற்கும் ஏற்ற ஒழுங்குகளை செய்து தரவேண்டும் என இப்பிரதேசத்தை பரிபாலித்து வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.