இந்தியாவில் விதவையான மருமகளுக்கு அவரின் மாமனாரும், மாமியாரும் சேர்ந்து இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் தஹிமா. இவர் மகன் பெட் பிரகாஷ் (30) என்பவருக்கும், ராஷ்மிரிகா (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ல் திருமணம் நடந்தது.
இந்நிலையில் கடந்த 2014 யூன் 29-ஆம் திகதி பிரகாஷ் சாலை விபத்தில் மரணமடைந்தார். அப்போது கர்ப்பமாக இருந்த ராஷ்மிரிகா தனது மாமனார் வீட்டில் தங்கியவாறு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து மருமகளை பட்டப்படிப்பு படிக்க வைத்த ராஜேஷ் அவரை ஆசிரியை பணியிலும் சேர்த்து விட்டுள்ளார்.
இந்நிலையில் இளம் வயதிலேயே ராஷ்மிரிகா விதவையாகி விட்டதால் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க ராஜேஷும், அவர் மனைவியும் முடிவு செய்தனர்.
இது குறித்து ராஷ்மிரிகா பெற்றோரிடம் அவர்கள் பேச, சம்மதம் கிடைத்தது. இதையடுத்து சுமித் அகர்வால் (32) என்ற நபரை ராஷ்மிரிகாவுக்கு மணமுடிக்க முடிவெடுக்கப்பட்டது.
சுமித்துக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சுமித் – ராஷ்மிரிகா திருமணம் இரு தினங்களுக்கு முன்னர் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் புடைச்சூழ நடைபெற்றது.
தாய், தந்தை ஸ்தானத்தில் இருந்து ராஷ்மிரிகாவுக்கு அனைத்து சடங்குகளையும் அவரின் மாமனாரும், மாமியாரும் செய்தார்கள்.
திருமணத்துக்கு பின்னர் ராஜேஷ் கூறுகையில், ராஷ்மிரிகா எங்கள் மருமகளாக இருந்தாலும் மகளை போல தான் பார்த்து கொண்டோம். அவளுக்கு திருமணம் நடந்தது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.






