விளையாடித் திரியும் மாணவர்களின் சட்டைப்பையில் போதை மாத்திரைகள்!!

620

 

ஜனாதிபதியின் பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தில் போதைப் பொருள் பாவனையில் இருந்து சமூகத்தை பாதுகாப்போம் என்னும் தொனிப் பொருளில் வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தினால் இன்று விழிப்புணர்வூ பேரணியூம் விழிப்புணர்வு கூட்டமும் இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் அதிபர் என்.எம்.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.அஜ்மீர், ஆசிரிய ஆலோசகர் எம்.சபூர், வாழைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் மௌலவி. எம்.முஸம்மில் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலையில் இருந்து ஆரம்பமான போதை ஒழிப்பு பேரணி வாழைச்சேனை சந்தை வழியாக சென்று பிரதேசசபை வீதியினூடாக பாடசாலையை சென்றடைந்ததும் அங்கு விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றஹ்மான், “கடந்த காலத்தில் மது, கஞ்சா, அவின், ஹேரோயின் பாவனையில் இருந்து எமது சமூகம் விடுபட்டு வருகின்ற வேளையில் மிகக் கொடூரமான செயற்பாடாக போதை மாத்திரைகள் பாவிக்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் மது, கஞ்சா, அவின், ஹேரோயின் பாவிப்பவர்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும். ஆனால் தற்போது போதை மாத்திரை பாவிப்பவர்களை அறிந்து கொள்ள முடியாது. ஆனால் படிப்படியான சில வருடங்களில் மாத்திரம் கண்டு கொள்ள முடியும்.

எனவே பெற்றோர்கள் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி அவர்கள் வீட்டை விட்டு செல்லும் வரை எங்கெல்லாம் செல்கின்றார்கள், யாருடன் பழக்கம் வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.சிவதர்சன் கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலைய பிரிவுகளில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரிவிற்குட்ட பகுதியில் அதிக போதைப் பாவனையாளர் உள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பன்னிரண்டு பொலிஸ் நிலையங்கள் உள்ளது. அதில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் போதை பாவனை தொடர்பான விசாரணைகள் அதிகம் காணப்படுகின்றது.

வாழைச்சேனை பொலிஸாரால் போதை மாத்திரைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதில், பாடசாலை மாணவர்களே அதிகம் பாவிக்கின்றனர் என தெரியவந்துள்ளது.

சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களின் பிள்ளைகளே அதிகம் போதை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.

பாடசாலை மாணவர்கள் விளையாடும் இடங்களுக்கு சென்று அவர்களை சோதனை செய்யும் போது சட்டைப்பையில் போதை மாத்திரைகள் காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் பாடசாலைகளுக்கு சென்று விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். மேலும், ஆழ்கடலுக்குச் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் போகும் போது கஞ்சா கொண்டு சென்று அங்கு பாவனையில் ஈடுபடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக” ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றஹ்மான் தெரிவித்துள்ளார்.