வவுனியா நகரினை அழகிய நகரமாக மாற்றி மக்களிடம் கையளித்துவிட்டு செல்ல வேண்டும்!!

289

 

வவுனியா நகரசபையின் முதலாவது அமர்வு நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (25.04.2018) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றபோது நகரசபை உறுப்பினர் லக்ஸ்சனா நாகராஜன் தனது உரையில் வவுனியா நகரினை அழகிய நகரமாக மாற்றி மாநகரசபையாக நாம் மக்களிடம் கையளித்துவிட்டு செல்ல வேண்டும் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இச்சபைக்கு ஆகக் கூடுதலான வாக்குகள் மூலம் ஆகக் கூடிய உறுப்பினர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக தெரிவு செய்த மக்களுக்கு முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் எமது கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு விகிதாசார ஆசனத்தை என் மீது முழுமையான நம்பிக்கை வைத்து என்னை நியமித்த கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று இச்சபையிலே தனிப்பெரும் கட்சியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு விளங்குகின்றது. இந்த சபைக்கு தலைமை தாங்கும் பொறுப்பை, உரிமையை மக்கள் கூட்டமைப்புக்கே வழங்கியிருந்தனர். பெரும்பான்மை நகர மக்களின் தீர்ப்பு இன்று சவால்களுக்கு உட்படுத்தப்பட்டு ஜனநாயகத்தை மதிப்பவர்களுக்கும், நேசிப்பவர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது.

எல்லை மீறிய கட்சி நலன்களும் பழிவாங்கல்களும் மக்களின் உணர்வுகளை உதாசீனம் செய்து வரலாற்றுக்களைகளை இச்சபைக்கு விட்டுச் சென்றிருக்கின்றமை வேதனைக்குரியவையே.

மக்கள் தீர்ப்புக்கு அப்பால் இச் சபையின் தலைமைக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்துக்கு மதிப்பளிப்பதும் செவிசாய்ப்பதும் ஜனநாயகத்தை மதிக்கின்ற எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையென்பதை நாம் மறந்துவிட முடியாது.

மக்கள் பிரதிநிதிகளால் மக்களுக்காக மக்களின் அபிலாசைகளையும், தேவைகளையும் நன்கறிந்து இனங்கண்டு இந்த நகரினை அழகுபடுத்தவும், தூய்மைப்படுத்தவும் நாம் ஒன்றினைவோம் என அனைவரையும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இன, மத, கட்சி, சமூக வேறுபாடின்றி, வட்டார பாகுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நகரசபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்களுடன் நாம் நல்லுறவை பேணிக்கொள்ள வேண்டும்.

எங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவர்களின் கரங்களிலேயே இருக்கின்றது. குறிப்பாக சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என சுகாதாரதுறை சார்ந்தவர்களுடன் கடந்த காலங்களில் இச் சபையானது சீரான உறவை பேணவில்லை என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டிருந்ததை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

கலாச்சாரம், பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மதங்களின், இனங்களின் கலாச்சாரம் சீரழிக்காமல் மூவினத்தவரின் முத்தான நகராக பேண ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குறிப்பாக போதைப்பொருட் பாவனை, விற்பனை முற்றாக தடைசெய்யப்பட்ட நகராக மாற்றியமைக்கப்பட வேண்டும். நவீன வசதிகளுடனான பெண்களுக்கான விசேட தனியான மலசலகூட வசதிகள் நகரில் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும்.

எதிர்வரும் நான்காண்டு காலப்பகுதியில் எமது செயற்பாடும், நகரின் மாற்றமும் மாநகரசபையாக நாம் மக்களிடம் கையளித்துவிட்டு செல்ல வழிசமைக்க வேண்டும்.

இறுதியாக தலைவரினாலும், சபையினாலும் முன்னெடுத்துச் செல்லப்படும் திட்டங்கள், அபிவிருத்திப்பணிகள் மக்கள் நலனை மையமாகக் கொண்ட திட்டங்களாயின் எங்கள் ஒவ்வொருவரினதும் ஆதரவும் நிச்சயம் இருக்கும்.

அரசியல் நலன்களுக்காக, கட்சி நலன்களுக்காக, தனிப்பட்டவர்களின் சுய தேவைக்கான திட்டங்களெனில் முற்றாக எதிர்த்து நிற்க தயங்க மாட்டோம் என்பதனை சொல்லிவைக்க விரும்புகின்றோம் என மேலும் தெரிவித்தார்.