கனடாவில் உயிரிழந்தது இலங்கைப் பெண்ணா? குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம்!!

1120

கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இந்த அனர்த்தம் காரணமாக எந்தவொரு இலங்கையர்களும் உயிரிழக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நேற்று முன்தினம் டொரான்டோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்படவில்லை.

பயங்கரவாத தாக்குதலில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்தி இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்படடுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

டொரான்டோவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அந்நாட்டு பொலிஸ் மற்றும் தூதரக அதிகாரிகளும் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. எனினும் இதுவரை எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக வில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபடுவோம். உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடைத்தால் விரைவில் அறியத்தருவோம் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கைப் பெண்ணான ரேனுகா விஜயசிங்க உயிரிழந்துள்ளார் என்பதை டொரான்டோ மஹா விஹார பௌத்த நிலையத்தின் பிரதான தேரர் அஹாங்கம ரத்னசிறி உறுதி செய்துள்ளார்.

அத்துடன் ரேனுகாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் இரங்கல்களை முகப்புத்தகம் வாயிலாக வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தாக கூறப்படும் ரேனுகாவுக்கு கணவன் உயிரிழந்துள்ள நிலையில், 7 வயதில் ஒரு மகன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தாயை இழந்துள்ள மகனுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் அவர்களின் நண்பர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக gofundme எனும் இணையத்தளத்தின் ஊடாக நிதியுதவி கோரப்பட்டுள்ளது.