யாழ். மாணவன் சாதனை : 32 வருட சாதனையும் முறியடிப்பு!!

713

கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் யாழ். மாணவன் சாதனை படைத்துள்ளார். யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியை சேர்ந்த ஏ.பவித்ரன் என்ற மாணவன் கோலூன்றி பாய்தல் போட்டியில் 4.7 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனையை நிலைநாட்டினார்.

அத்துடன் நேற்று நடைபெற்ற போட்டியில் மேலும் பல மாணவ மாணவிகள் சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர். மேலும். 32 வருடங்களுக்கு முன் படைத்த சாதனையும் நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது.

இராஜகிரிய கேற்வே சர்வதேச பாடசாலையை சேர்ந்த சலின்டா யென்சனா இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவர் மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் 32 வருடங்களுக்குப் முன்னர் நிலைநாட்டப்பட்ட சாதனையை முறியடித்துள்ளார்.

இப்பாகமுவ மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த வீராங்கனை பி.பி.ஐ.என்.பல்லேகம 16 வயதுக்கு உட்பட்ட உயரம்பாய்தல் போட்டியில் சாதனை நிலைநாட்டியுள்ளார்.

ஜனாதிபதி பெண்கள் கல்லூரியை சேர்ந்த காவிந்தி சஞ்சனா எதிரிசிங்ஹ 16 வயதுக்கு உட்பட்ட 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் சாதனை நிலைநாட்டியுள்ளார்.

அக்குரம்பட வீரகெப்பெட்டிபொல கல்லூரியை சேர்ந்த அருண தர்ஷன 20 வயதுக்கு உட்பட்ட 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும், சச்சின் நிலக்சா பெரேரா 23 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேவேளை, போட்டிகளின் முதல் நாளன்று (23) நடைபெற்ற 23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வடமாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துப்படுத்தி கலந்து கொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் 3.55 மீற்றர் உயரத்தில் தாண்டி தேசிய சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.