விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நால்வருக்கு சிறைத்தண்டனை!!

534

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ஏ.கயல்விழி சிறைத்தண்டனை விதித்துள்ளார். கிருஷ்ண குமார், சுபாஷ்கரன், இராஜேந்திரன் மற்றும் சசிகுமார் ஆகியோருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் கிருஷ்ண குமார் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோருக்கு 10 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இராஜேந்திரன் மற்றும் சசிகுமார் ஆகியோருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்ட குற்றச்சாட்டி இந்த நான்கு பேருக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

“2015ம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து மண்டபம் செல்லும் வழியில் மேற்கொண்ட சோதனையின் போது கிருஷ்ணகுமார், இராஜேந்திரன் சசிக்குமார் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த சுபாஸ்கரன் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து 4 ஜி.பி.எஸ்.கருவிகள், 75 சயனைட் குப்பிகள், 600 கிராம் சயனைட் விஷம், என்பவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இவர்களுக்கு எதிராக வழக்கின் தீர்ப்பு இன்று இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றில் வழக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.