பிரித்தானியா செல்ல முயற்சிக்கும் உங்களுக்கு ஓர் இனிப்பான செய்தி!!

380

visaஆறு ஆபத்தான நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு பயணம் செய்வோர் மூவாயிரம் பவுண்ட்ஸ்களை பிணைப் பணமாக செலுத்த வேண்டும் என்ற கட்டாய திட்டம் ரத்துச் செய்யப்படுவதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கானா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு ஆறு மாத கால விசாவை வழங்க பணத்தை வைப்புச் செய்யும் திட்டம் ஒன்றை அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் முன்வைத்திருந்ததுடன் அதனை நவம்பர் மாதம் அமுல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் தெரேசா தெரிவித்திருந்தார்.

6 மாத கால விசா வழங்கப்படும் நபர்கள் அந்த அனுமதி காலத்தையும் தாண்டி பிரித்தானியாவில் தங்கியிருந்தால் வைப்புச் செய்த அந்த பணத்தை அரசாங்கம் பறிமுதல் செய்யும் என அந்த திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விசா காலம் முடிந்து தொடர்ந்தும் பிரித்தானியாவில் தங்கியிருப்போர் அங்கு தங்கியிருப்பதை தடுக்கும் வகையில் இந்த திட்டத்தை கொண்டு வருவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வந்தாக உள்துறை அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அதனை தொடர வேண்டும் என்று இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார். ஆரம்பத்தில் இது ஆயிரக்கணக்கான பயணிகளை பாதிக்கும் என்றாலும் நூற்றுக்கணக்கானவர்களே அதற்கான இலக்கு என ஜூன் மாத அறிக்கைகள் தெரிவித்தன.

இந்த திட்டத்தை அமுல்படுத்த இடமளிக்க போவதில்லை என துணைப் பிரதமர் நிக் கிளாக் அழுத்தங்களை கொடுத்ததை அடுத்தே அரசாங்கம் இந்த திட்டத்தை கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு செல்வோர் பிணைப்பணமாக 3000 பவுண்ஸ் செலுத்த வேண்டுமென்பதை நீக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.