இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல பாடகி மாதங்கி மாயா அருள்பிரகாசத்தை லண்டனில் இருந்து கனடா செல்ல அனுமதிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
ஆவணப்படம் ஒன்றை திரையிடுவதற்கு கனடா செல்லச் சென்ற மாயாவை விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் 42 வயதான மாயா தனது Instagram வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் கனடா செல்ல விமானத்தில் அனுமதிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். தனது புதிய படத்தைப் பற்றி பாராட்டி பேசுவதை நிறுத்தும் முயற்சியில் ‘மர்மமான நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளார் என மாயா குறிப்பிட்டுள்ளார்.
“பொறாமை ஒரு பயங்கரமான விடயம்” என குறிப்பிட்டவர் ஆவணப்படம் ஒன்றை திரையிடுவதற்காக தான் கனடா செல்ல முயற்சித்த போது லண்டன் விமான நிலையத்தில் தன்னை விமானத்தில் பயணிக்க அனுமதிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2017ஆம் ஆண்டு ஒரு பிரச்சினைக்குரிய விடயத்தில் எனது பெயரை மர்மமான நபர் ஒருவர் முத்திரையிட்டுள்ளார்.
அது யார் என யாருக்கும் தெரியவில்லை அல்லது எதனுடன் தொடர்புடையவர் என்றும் தெரியவில்லை. கனடா மற்றும் அமெரிக்காவிலும் எனது ஆவணப்படம் குறித்த பேச கூடாதென நினைக்கின்ற அந்த சக்திவாய்ந்த நபர் யாரென தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் மனிதாபிமானத்துடைய சிறந்த குடியேற்ற வழக்கறிஞர் யார்? என மாயா தனது டுவிட்டர் பக்கத்தில் வினவியுள்ளார்.
அவர் தயாரித்துள்ள இந்த ஆவணப்படத்திற்கு ஜனவரி மாதம் அவர் விருதுகளையும் வென்றுள்ளார். முழுமையாக அந்த படம் மூலம் தனது இசைப்பயணத்திற்கு ஒரு சிறப்பான பாதை உருவாகும் என எண்ணிய மாயாவுக்கு தற்போது பாரிய ஏமாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.