வத்தலகுண்டு புதுப்பட்டி மக்களுக்கும் அருகில் உள்ள இலங்கை அகதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கல்வீச்சில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு 16வது வார்ட் புதுப்பட்டி. இந்த பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமிற்கு அருகில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இலங்கை இளைஞர்கள் சிலர் மது குடித்துவிட்டு போத்தலை கோயில் அருகே வீசியுள்ளனர்.
இதனால் புதுப்பட்டியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இலங்கை இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். இரு பகுதியிலும் பல்வேறு வதந்திகள் பரவின.
இதையடுத்து கலவரம் மூண்டது. ஓணான்கரட்டு அடிவாரத்தில் அகதிகள் முகாம் இருப்பதால் கரட்டில் நின்று மர்ம ஆசாமிகள் முகாம் மீது கற்களை சரமாரியாக வீசினராம். புதுப்பட்டி பகுதி மக்கள் மீது இலங்கை அகதிகள் கற்களை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கல்வீச்சில் 15 பேர் காயமடைந்து வத்தலகுண்டு அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு புதுப்பட்டி, இலங்கை அகதிகள் முகாமில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வத்தலகுண்டு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.




