தெற்காசிய இளநிலைப் பரிவினருக்கான தடகளத் தொடர் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடருக்கான இலங்கை அணியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்து தமிழ் வீரர்கள் இருவர் இடம்பிடித்தனர்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் சி.பிரகாஸ்ராஜ் தட்டு எறிதல் போட்டியிலும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியலாயத்தைச் சேர்ந்த சிவநாதன் கிந்துஷன் 5 ஆயிரம், 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளார்.
இந்நிலையில், 3ஆவது தடவையாக நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இம்முறை இலங்கையிலிருந்து 84 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் 44 வீரர்களும், 40 வீராங்கனைகளும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன், நீண்ட இடைவெளியின் பிறகு இம்முறை 4 தமிழ் பேசுகின்ற வீரர்களும் இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தைச் சேர்ந்த சிவநாதன் கிந்துஷன் வெற்றிபெற்று வவுனியா மண்ணுக்கு பெருமைசேர்க்க வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கடந்தவாரம் இடம்பெற்ற இளநிலைப் பிரிவினருக்கான தேசியமட்ட தடகளத் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 5000 மற்றும் 10 000 மீற்றர் ஓட்டங்களில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சிவநாதன் கிந்துஷன் தங்கப் பதக்கங்களைச் சுவீகரித்தார். கொழும்பு சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.கிந்துஜன் 15 நிமிடங்கள் 56 செக்கன்கள் 10 மில்லி செக்கன்களில் ஓடி தங்கப் பதக்கத்தை வென்றார்.
இவர் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் 33 நிமிடங்கள் 56 செக்கன்கள் 81 மில்லி செக்கன்களில் ஓடி தங்கப்பதக்கம் வென்றார்.







