திருகோணமலை – பாலையூற்று பகுதியில் இன்று அதிகாலை கணவனொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் காயமுற்ற மனைவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பாலையூற்று முருகன் கோயிலடியைச் சேர்ந்த நல்லிதன் தமயந்தி (26 வயது) எனும் இளம் குடும்பப் பெண் என தெரியவருகின்றது.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவியை கணவன் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கணவரான ராசய்யா ரேஹனை (34 வயது) கைது செய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.






