இனி குடிக்கமாட்டேன் : தற்கொலை செய்த மாணவனின் தந்தை உருக்கம்!!

726

தனது மகனின் விருப்பப்படியே இனிமேல் மது குடிக்க மாட்டேன் என தற்கொலை செய்து கொண்ட தினேஷின் தந்தை உருக்கத்துடன் கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகே கே.ரெட்டியபட்டியை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் தினேஷ் நல்லசிவன்(வயது 17), 12ம் வகுப்பு படித்து முடித்துள்ள தினேஷ் இரு நாட்களுக்கு முன் நெல்லையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னர் எழுதியிருந்த கடிதத்தில், தான் இறந்த பிறகாவது தந்தை மதுப்பழக்கத்தை விட வேண்டும் எனவும், மதுக்கடைகளை மூட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மகனின் சடலத்தை பார்த்து கதறிய மாடசாமி, மதுவை விடும்படி தினேஷ் எவ்வளவோ கூறியும் என்னால் அப்பழக்கத்தில் இருந்து மீளமுடியவில்லை, மருத்துவராக கனவு கண்ட மகனை இழந்து விட்டேன்.

என் குடும்பத்தை பார்த்தாவது மது அருந்துபவர்கள் திருந்த வேண்டும், இனிமேல் மது அருந்த மாட்டேன், அப்போதுதான் என் மகனின் ஆன்மா சாந்தி அடையும் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.