மன்மோகனின் இலங்கை விஜயத்துக்கு அந்தோணியும் எதிர்ப்பு : காங்கிரஸுக்குள் பரபரப்பு!!

288

manmohanஇலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதற்கு எதிர்ப்பு மேலும் வலுத்துள்ளது.

காங்கிரசைச் சேர்ந்த மேலும் இரண்டு மத்திய அமைச்சர்கள் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இம்மாதம் 15ம் திகதியிலிருந்து 17ம் திகதி வரை பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடக்கிறது. இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

எனவே மனித உரிமை மீறல்கள் நடந்த இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடுகள் நடத்தக் கூடாது. அப்படியே நடந்தாலும் அதில் இந்தியா பங்கேற்க கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மத்திய கப்பல் துறை அமைச்சரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ஜி.கே.வாசன் சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது என வலியுறுத்தினார்.

இதற்கிடையே விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா, இலங்கை ராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்படுவது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுரமாக கொல்லப்படுவது தொடர்பான வீடியோ காட்சிகளை பிரிட்டனின் சனல்-4 நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

இதனால் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது என்ற எதிர்ப்பு குரல் காங்கிரசுக்குள்ளேயே மேலும் வலுப்பட்டுள்ளது. ராணுவ அமைச்சர் அந்தோணி இந்த விஷயத்தில் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது என்பது தான் என் நிலை என பிரதமர் அலுவலக விவகாரத் துறை அமைச்சரும் புதுச்சேரி எம்.பி. நாராயணசாமி நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். மேலும் சில மத்திய அமைச்சர்களும் இதே கருத்தை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். பிரதமர் இலங்கை செல்லக் கூடாது என்பது தான் பெரும்பான்மையினரின் விருப்பம். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

இலங்கை ராணுவத்தால் இசைப்பிரியா கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டிக்கிறேன். அந்த வீடியோவை முழுமையாக பார்க்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தி விட்டேன். இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க கூடாது என சென்னை விமான நிலையத்தில் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல் நடந்துள்ள இலங்கையில் நடக்கும் மாநாட்டில், யாரும் பங்கேற்க கூடாது. இதுகுறித்து பிரதமருக்கு விரைவில் கடிதம் எழுத உள்ளேன் எனவும் அவர் கூறினார்.

ஆனால் மத்திய வர்த்தக துறை இணை அமைச்சர், தமிழகத்தை சேர்ந்தவருமான சுதர்சன நாச்சியப்பன், இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை செல்ல வேண்டும் என்றார்.

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க பிரதமருக்கு காங். கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்துள்ளதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீம் அப்சல் கூறியதாவது.. இது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான விஷயம். இதுபோன்ற விஷயங்களில் அரசுடன் ஆலோசித்து அதற்கு பின் தான் காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும். இது தொடர்பாக அரசு தரப்பில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதுவே காங்கிரசின் முடிவு.

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பது குறித்த விஷயத்தில் விரிவான ஆலோசனைக்கு பின் பிரதமர் மன்மோகன் சிங் முடிவெடுப்பார். இதில் எங்களின் கருத்தை தெரிவிக்க முடியாது. அது சரியான செயல் அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.