பிரித்தானியாவில் இருந்து யாழ் சென்ற தமிழ்ப் பெண்ணுக்கு புகையிரதத்தில் நடந்த கொடுமை!!

369

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் சென்ற போது, நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளார்.

கொழும்பில் இருந்து ரயில் மூலம் யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது, ரயில் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளால் தமிழ் பெண்ணை திட்டியுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில், குறித்த ஊழியர் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டமையால் ரயில் பயணித்தவர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவம் இன்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு யாழ்.நோக்கி வந்த புகையிரத நிலையத்திலேயே சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா புகையிரத நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன் போது குறித்த புகையிரதத்தில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட புகையிரதத்தில் பணியாற்றுகின்ற சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர்,

குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இதனை அவதானித்த அங்கு நின்றவர்கள் குறித்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என கேட்ட போது, அவ்வாறு கேட்டவர்களை தாக்க முயற்சித்தார்.

தமிழர்கள் கீழ்த்தரமானவர்கள் போன்று தகாத வார்த்தைகளை அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். இதன்போது அங்கு சென்ற ஊடகவியாலாளர் ஒருவரையும் அவர் தாக்க முயற்சித்தார். இந்த சம்பவம் சாவகச்சேரி புகையிரத நிலையத்தை அண்மித்த போது நடந்து கொண்டிருந்தது.

இதன் போது நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, பொலிசாராலும் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான் தான் பெரியவன் என்று மிரட்டும் தொணியில் குறித்த ஊழியர் அனைவரையும் மிரட்டினார்.

இந்த சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்த போது குறித்த ரயிலில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் எவரும் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை. இதனால் பயணித்த அனைவரும் பயத்தில் உறைந்திருந்தார்கள்.

புகையிரதம் யாழ்.பிரதான புகையிரத நிலையத்தை வந்ததடைந்ததும், சம்பவம் தொடர்பில் யாழ்.புகையிரத அதிபருக்கு குறித்த பெண்ணால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்துக்கான ஆதாரமாக காணொளியும் வழங்கப்பட்டது. இதனை அடுத்து இது தொடர்பில் தான் உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு ஒன்றை செய்வதாக அவர் கூறினார்.

இதேவேளை இந்த அச்சுறுத்தல் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டமை குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.