தமிழர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை!!

536

 

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் சிக்கி, அங்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர்- குல்மார்க் பகுதியில் போராட்டத்தின் இடையே போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்தனர். போராட்டக்காரர்கள் நடத்திய கல் வீச்சு தாக்குதலில் அப்பகுதியில் சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த திருமணி (21) என்ற இளைஞர் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவத்தில் சில வாகனங்கள் கல்வீச்சுக்கு இரையானதாக கூறப்படுகிறது. அதில் ஒரு வாகனத்தில் இருந்த சென்னை இளைஞர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி, வெட்கத்தால் எனது தலை கவிழ்ந்து போயுள்ளது என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, நமது மாநிலத்திற்கு வந்த ஒரு விருந்தாளியை கல்லால் அடித்து நாம் கொன்றுள்ளோம், இந்த உண்மையில் இருந்து நம் முகத்தை இனி எங்கே மறைத்து வைப்போம் என முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வேதனை தெரிவித்துள்ளார்.