திருவண்ணாமலை அருகே மூதாட்டி மற்றும் அவருடன் வந்தவர்களை அடித்து நொறுக்கிய சம்பவத்தில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அருகே உள்ள போளூரில் குழந்தைகளுக்கு சாக்லேட் தந்த பாட்டி மற்றும் அவர் கும்பத்தினரை அந்த கிராம மக்கள் குழந்தை திருடும் கும்பல் என நினைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மூதாட்டி பலியானார்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் ருக்மணி என்கிற 65 வயது மூதாட்டி இவர் தனது குடும்பத்தை சேர்ந்த மோகன்குமார் உள்ளிட்ட ஐந்து பேருடன் குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிட செல்லும் பொருட்டு காரில் சென்றனர். திருவண்ணாமலை அருகே உள்ள அத்திமூர் தான் இவர்கள் குலதெய்வ கோவில் இருக்கும் ஊர்.
அங்கு குலதெய்வ கோயிலுக்கு செல்ல வழி கேட்பதற்காக டிரைவர் ஒரு கிராமத்தில் இறங்கியுள்ளார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தைகளிடம் ருக்மணி பிரியமாக சாக்லட் தந்துள்ளார்.
இதனை கண்ட ஊர் மக்கள் மூதாட்டி ருக்மணி மற்றும் அவருடன் வந்தவர்கள் குழந்தைகள் கடத்தும் கும்பல் என்று சந்தேகம் கொண்டனர். இதனை அடுத்து அனைவரையும் வயது வித்தியாசம் பார்க்காமல் அடிக்க தொடங்கியிருக்கின்றனர்.
நிலைமை மோசமானதை தொடர்ந்து அவர்கள் காரில் ஏறி தப்பிக்க நினைக்கையில் அடுத்த ஊர் காரர்களுக்கு போன் போட்டு வண்டியை மறிக்க சொல்லி அங்கும் அவர்களை அடித்து உதைத்திருக்கின்றனர். இந்த கொடூரத்தை வீடியோவாக எடுத்த ஊர் மக்கள் வாட்ஸப்பில் பெருமையாக உலவ விட்டிருக்கின்றனர்.
சிகிச்சை பலனின்றி ருக்மணி (65) இறந்த நிலையில் , அவருடன் வந்தவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது இவர்களின் ஆடைகளை உருவி தீவிரமாக தாக்கியிருப்பது வீடியோவில் தெரிய வந்துள்ளது.
இது பற்றி ருக்குமணி அம்மாவின் பக்கத்துக்கு வீட்டாரிடம் கேட்ட போது ருக்மணி மிகவும் அன்பானவர். உதவி செய்யும் இரக்க குணம் வாய்ந்தவர் அவர் அன்பினால் குழந்தைகளுக்கு தந்த இனிப்பு அவரது உயிரையே குடித்து விட்டது. அவரின் குடும்பத்திற்கு இந்த கிராமத்தார் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்று சோகமாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அத்திமூர் காவல் துறையினர் வாட்சப் விடியோவை வைத்து 50 பேரை குற்றவாளிகளாக கருதி அவர்களை தேடி வருகின்றனர்.
இன்று மாலைக்குள் மீதமிருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிய வருகிறது. தம்பு கொட்டன்பாரை கலையன் கிராமத்தை சேர்ந்த 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 100 பேர் கொண்ட காவல்துறையினரை ஏழு குழுவாக பிரித்து வீடு வீடாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசுகையில் மனித நேயம் செத்து விட்டது என்று வருத்தப்பட்ட எஸ் பி பொன்னி அவர்கள் மேலும் சட்டத்தை கையில் எடுத்து கொள்ள கூடாது, வாட்சப் வதந்திகளை நம்ப கூடாது எனவும் தெரிவித்தார் . கைதுக்கு பயந்து ஊர் மக்கள் வீட்டை காலி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.








