வவுனியாவில் சிறைக்கைதிகளுக்கு அநீதி : களத்தில் இறங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழு!!

319

வவுனியா சிறைச்சாலைக்கு இன்று (11.05.2018 காலை 10.45 மணியளவில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர்.எம்.வசந்தராஜா தலைமையில் சென்ற குழுவினர் சிறைக் கைதிகளிடம் பல மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அண்மையில் சிறைக் கைதி ஒருவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற சிறைச்சாலையில் இடம்பெறும் ஊழல்கள், அராஜகங்கள் தொடர்பாக முறையிட்டதையடுத்து சிறைச்சாலை விவகாரம் சூடு பிடித்துள்ளதுடன் நீதவான் சிறைச்சாலை அதிகாரியிடம் இது குறித்த அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று திடீரென வவுனியா மாவட்ட சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைதிகளிடம் நீண்ட விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமாக ஆர். எம் வசந்தராஜா,

சிறைச்சாலையிலுள்ள கைதிகளிடமும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் சிறைக்காவலர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளது.

பெற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கைகளை கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆணைக்குழுவின் அறிக்கைகள் எமக்கு கிடைத்த பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.


​வவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நேற்றையதினம் (10.05.2018) வவுனியா சட்டத்தரணிகள் ஒரு மணிநேரம் (11 மணி தொடக்கம் 12 மணி வரை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.​