யாழில் அதிபரின் அடாவடியால் உயிரிழந்த ஆசிரியையின் இறுதிக்கிரியைகள்!!

676

யாழ்ப்பாணத்தில் அதிபரின் அடாவடியான கடும் நெருக்கீடு காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் ஆசிரியையின் இறுதிக்கிரியைகள் நேற்று நடைபெற்றுள்ளன.

தமிழ்ப் பாட ஆசிரியரான கவிதா ஜெயசீலன் என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இவரது இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் யாழ். திருநெல்வேலியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், உறவினர்கள், கல்வி அதிகாரிகள், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தினர் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியிலுள்ள கலவன் பாடசாலை ஒன்றில் நீண்ட காலமாக குறித்த ஆசிரியை கடமையாற்றியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாடசாலையின் அதிபர் ஆசிரியையை பழிவாங்கும் நோக்குடன் தொடர்ச்சியாக பல நெருக்கீடுகளைக் கொடுத்துவந்ததன் விளைவாக ஆசிரியை அப்பாடசாலையிலிருந்து கடந்த வாரம் இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.

எனினும் குறித்த அதிபர் ஆசிரியைக்குரிய ஆவணங்களை வழங்க மறுத்துள்ளதுடன், இடமாற்றம் பெற்றுச் சென்றாலும் தனது பாடசாலைக்கு வந்து மாலை நேரத்தில் கற்பிக்க வேண்டும் என்று நெருக்கீடுகள் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் இந்த பாடசாலையில் ஆசிரியை கடமையாற்றியதை உறுதிப்படுத்தும் சம்பளப் படிவம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை உறுதிப்படுத்தி வழங்காது நிறுத்தியுள்ளார்.

அதிபரின் இந்த செயல் காரணமாக மனமுடைந்து ஆசிரியை தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் குறித்த ஆசிரியையால் வலயக்கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட பொறுப்பு வாய்த உயரதிகாரிகளுக்கு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சு நேரடியாகத் தலையிட்டு நீதியான விசாரணைகளை நடத்த வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த சம்பவம் கல்வி சமூகத்தை சோகத்தை ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.