ஸ்மார்ட் போன்களின் விற்பனையை கைவிட்டது பிளாக்பெரி நிறுவனம்!!

359

Blackபிளாக்பெரி சாதனத்தால் வாடிக்கையாளர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில் இந்த வகையான போன்கள் செல்லமாக கிராக்பெரி என்று கூட குறிப்பிடப்பட்டன.

1999ம் ஆண்டில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தொடர்புகளில் இந்த வகை போன்கள் தனிப்பட்ட திருப்புமுனையைக் கொடுத்தன. வணிக மக்களை கம்பியில்லா மின்னஞ்சல் கலாச்சாரத்திற்கு பிளாக்பெரியின் தொழில்நுட்பம் மாற்றியது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முதல் ஒபரா வின்ப்ரே வரை இந்த வகை போன்களை உபயோகிப்பவர்களே ஆவார்கள். அதன்பின்னர் 2007ம் ஆண்டில் அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபோன்களின் போட்டியை இந்நிறுவனத்தால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இந்த வருடத்தின் வெளியீடான பிளாக்பெரி 10 மொடல் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறமுடியவில்லை. இதன் தோல்வியிலேயே அவர்கள் தங்களின் விற்பனையைக் கைவிட்டுவிட்டதாக வர்த்தக ஆய்வாளரான மைக் வால்க்லே தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனத்தின் பங்குதாரரான பேர்பொக்ஸ் பைனான்சியல் நலிந்துவரும் ஸ்மார்ட்போன் நிறுவனத்தை வாங்கி தனிப்பட்ட முறையில் நடத்தும் திட்டமில்லை என்பதை நேற்று தெரிவித்துவிட்டது. இதற்குப் பதிலாகத் திருத்தப்படும் முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக பங்குதாரர்களால் ஒரு பில்லியன் டாலர் வரை இதில் முதலீடு செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தார்ஸ்டன் ஹெயின்ஸ் பதவி விலகி அவருக்குப் பதிலாக ஜோன் சென் இயக்குனர்கள் குழுவின் தலைவராகவும் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பேற்க உள்ளார்.

மென்பொருள் தரவு நிறுவனமான சைபேசின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சென், பிளாக்பெரி ஊழியர்கள் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும் என்றும் தொலைபேசி உற்பத்தித்துறையைத் தவிர்த்து அவற்றுக்கான மென்பொருள் மற்றும் சேவை குறித்த பணியில் கவனம் செலுத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒன்டோரியோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிளாக்பெரி நிறுவனம் சமீபத்தில் 4500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இது உலக அளவிலான அதன் பணியாளர்களில் 40 சதவிகிதமாகும். அதுமட்டுமின்றி இந்நிறுவனத்தின் காலாண்டு இறுதிமுடிவுகள் ஒரு பில்லியன் டொலர் நஷ்டத்தையே காட்டியுள்ளது.