வவுனியாவில் பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கி 61 ஆடுகளை கடத்த முற்பட்ட நபர் கைது!!

329

 

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் 61 ஆடுகளை சட்டவிரோதமாக கடத்தியமை, பொலிஸாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்டமை என இரு குற்றச்சாட்டுகளை முன்வைத்து புத்தளம் பகுதியினை சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரை இன்று (15.05.2018) அதிகாலை 1.30 மணியளவில் வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக 61ஆடுகளை கடத்த முற்பட்ட வாகனத்தினை வவுனியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி அவர்களின் தலமையில் வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொருப்பதிகாரி இ.எம்.பி சுபசிங்க வழிகாட்டலின் கீழ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் விஷேட சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சோதனையிட்ட சமயத்தில் அனுமதிப்பத்திரமின்றி, போதிய இடவசதியின்றி 61 ஆடுகளை புத்தளத்திற்கு கடத்த முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதனையடுத்து குறித்த வாகனத்தின் சாரதியான புத்தளம் பகுதியினை சேர்ந்த 52 வயதுடைய நபர் பொலிஸாருக்கு ரூபா 2000 லஞ்சம் வழங்க முற்பட்ட சமயத்தில் பொலிஸார் அதனை வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் குறித்த சாரதி நான் அரசியல்வாதிகளின் உதவியுடனே இச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளேன் என்னை கைது செய்ய முற்பட்ட உங்களை இடமாற்றம் செய்வேன் என மிரட்டியுள்ளார்.

குறித்த வாகனத்தின் சாரதியினை பொலிஸார் கைது செய்ததுடன் வாகனத்தினையும் ஆடுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை பல நாட்களாக மேற்கொண்டு வந்துள்ளது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.