மலையகத்தில் இயற்கையின் சீற்றம் தொடர்கிறது..மண்சரிவு அபாயத்தினால் மக்கள் இடம்பெயர்வு..

415

கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூண்டுலோயா சீன் பழையத் தோட்டக் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் நான்காம் இலக்க தோட்டக்குடியிருப்பு மண்சரிவு அபாயத்துக்கு உள்ளாகியுள்ளதால் இந்தக் குடியிருப்பினைச் சேர்ந்த 9 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேரை தற்காலிக இடமொன்றுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பெய்த கடும் மழையின் போது இந்தக் குடியிருப்புப் பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டு குடியிருப்புச் சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.

இந்தக்குடியிருப்பைச் சேர்ந்தவர்களை சீன் தமிழ் பாடசாலையில் தங்கவைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அதேவேளை பூண்டுலோயா ஹெரோல் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மழையினாலும் கடுங்காற்றினாலும் தனி வீடொன்று சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.

சேத விபரங்கள் குறித்து நுவரெலியா மாவட்ட இடர்முகாமைத்து மத்திய நிலையத்தின் இணைப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை கடுங்காற்றினால் கொட்டகலை யுலிபீல்ட் தோட்டத் தொழிலாளர் குடியிருப்புக்களின் கூரைகள் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. மேலும் சீரற்ற கால நிலையினால் டிக்கோயா காசல்ரீ தோட்டப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மின்சார தடை ஏற்பட்டுள்ளதால் மின்பாவனையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் நாவலப்பிட்டி மின் பொறியிலாளர் பகுதியில் நேற்று இரவு 11.30 மணி முதல் ஏற்பட்ட மின்சார தடை இன்று காலை 9 மணிவரை நீடித்ததால் மின்பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.