சினிமாவுக்குள் நுழைந்தவுடன் தல, தளபதியாக வேண்டும் என நடிகர்கள் கனவு காண்பது தவறு : படவிழாவில் கேயார்!!

324

krஎமர்சைன்ஸ் ஃபுரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் விஜயலட்சுமி, ராஜலட்சுமி என இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் புதிய படம் காதல் சொல்ல ஆசை. இப்படத்தில் அஷோக் நாயகனாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக மது நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகங்கள் நடிக்கின்றனர்.

தமிழ் சீனு என்பவர் இயக்குகிறார். இவர் நாளைய இயக்குனர் என்று நிகழ்ச்சியின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இப்படத்திற்கு நடிகர் விஜய் அறிமுகமான நாளைய தீர்ப்பு படத்திற்கு இசையமைத்த லேக்கா என்பவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஓடியோ மற்றும் டிரைலர் வெளியீடு நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், நடிகர் விஜய் சேதுபதி, நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படத்தின் ஓடியோவை கேயார் வெளியிட விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் கேயார் பேசும்போது, சினிமாவுக்குள் நுழைந்தவுடன் எல்லா நடிகர்களும் தல, தளபதியாக வேண்டும் என்று கனவு காண்பது தவறு. கடின உழைப்பிற்கு பிறகுதான் சினிமாவில் நல்ல நிலைமைக்கு வரமுடியும். உதாரணத்திற்கு, விக்ரம் ஒரு நல்ல நடிகர் என அங்கீகாரம் கிடைக்க அவருக்கு 18 வருடங்கள் ஆனது.

நிறைய படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும் எந்தவித கெட்ட பழக்கத்துக்கும் அடிமையாகாமல், சினிமாவை விட்டு ஒதுங்காமல் டப்பிங் செய்வது உள்ளிட்ட மற்ற பணிகளில் வேலை செய்து சினிமாவிலேயே கவனம் செலுத்தி வந்தார்.

இறுதியாக சேது படத்தில் நடித்ததன் மூலமாகத்தான் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரம் கிடைத்தது. சினிமாவில் சாதிக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டும். எனவே, சினிமாவுக்கு வருபவர்கள் எல்லோருமே கஷ்டப்பட்டால்தான் முன்னுக்கு வரமுடியும் என்று பேசினார்.

எஸ்.ஜே.சூர்யா பேசும்போது யார் வேண்டுமானாலும் படம் இயக்கலாம், யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்பதை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது இயக்குனர் பாரதிராஜா. அதேபோல், நாளைய இயக்குனர் நிகழ்ச்சி நிறைய புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

அந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிவரும் இயக்குனர்கள் வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்கள். அந்த வரிசையில் இந்த படத்தின் இயக்குனரும் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்று பேசினார்.

விஜய்சேதுபதி பேசும்போது இப்படத்தின் நாயகன் அசோக் உடன் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளேன். அந்த படத்தில் நான் ஜுனியர் ஆர்டிஸ்டாக இருந்தேன். 250 சம்பளம் வாங்கிக் கொண்டு அந்த படத்தில் நடித்தேன்.

அசோக் ஒரு திறமையான நடிகர். அவருடைய திறமையை இன்னும் பயன்படுத்தி பெரிய நிலைக்கு வரவேண்டும். இப்படத்தின் இன்னொரு ஹீரோவான மதுவும் எனக்கு நன்கு தெரிந்தவர். அவர் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட். அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்களை கேட்டு தெரிந்திருக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.