வவுனியாவில் பல பகுதிகளில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!!

383

வவுனியா வைரவப்புளிங்குளம் பகுதியில் அண்மையில் பெய்து வரும் மழை காரணமாக அதிகளவில் டெங்கு நுளம்புகள் பெருக்கெடுத்துள்ளதாக பூச்சியியலாளர்களினால் இனங்காணப்பட்டுள்ளதாக வவுனியா பொது சுகாதார மேற்பார்வை பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் அண்மைய காலங்களில் மாலை வேளைகளில் அதிகரித்துக் காணப்படும் மழையுடனான காலநிலை காரணமாக குருமன்காடு, சூசைப்பிள்ளையார்குளம், வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துக்காணப்படுவதாகவும் இதனை பூச்சியியலாளர்களினால் இனங்கண்டுள்ளதாகவும்,

இப் பகுதிகளிலுள்ளவர்கள் தமது இருப்பிடங்கள், வீடுகள், வியாபார நிலையங்கள், கல்வி நிலையங்கள் அனைத்தையும் துப்பரவு பணிகள் மேற்கொண்டு டெங்கு நுளம்பு குடம்பிகள் பெருக்கெடுக்கா வண்ணம் இருப்பிடங்களை வைத்திருக்குமாறும் அவ்வாறு துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளாதவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழங்குத்தாக்கல் செய்யப்பட்டவுள்ளதாகவும்,

இவ்வாறு அண்மையில் நெளுக்குளம், கந்தபுரம் பகுதிகளில் பொது சுகாதாரப்பரிசோதகர்களினால் டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட நால்வருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் தலா மூவாயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.