மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை : 4 பில்லியன் டொலர் சிக்கியது!!

1080

 

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள விலையுயர்ந்த பொருட்கள் சிக்கியுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது, வளர்ச்சி நிதியத்தில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதன் பிறகு, நஜிப்பால் அமைக்கப்பட்ட அந்த நிதியத்துக்காக வந்த பல பில்லியன் டொலர்கள் கணக்கில் வரவில்லை என தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, மலேசிய அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்ட நஜிப், பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆனால், பிற நாடுகளால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையை மீண்டும் துவங்க முடிவு செய்வதாக தற்போதைய பிரதமர் மஹதீர் தெரிவித்தார். அத்துடன் சுமார் 700 மில்லியன் டொலர்களை நஜிப் கையகப்படுத்தியதாக கூறப்பட்டதை மீட்க முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக, நஜிப் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நஜிப்பின் அலுவலகம், தனியார் குடியிருப்பு மற்றும் தலைநகர் கோலாலம்பூரில் நஜிப்புக்கு சொந்தமான பல இடங்களில், பல நாட்களாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சோதனையில், சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான விலையுயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விலையுயர்ந்த கைப்பைகள் அடங்கிய 284 பெட்டிகள் அதில் கண்டறியப்பட்டதாக, வர்த்தக குற்றவியல் விசாரணை பிரிவின் தலைவர் அமர் சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எங்களது ஆட்கள் இந்த பைகளை சோதனை செய்ததில், 72 பைகளில் மலேசியாவின் ரிங்கெட், அமெரிக்க டொலர்கள், கைக்கடிகாரங்கள், நகைகள் ஆகியவை கண்டறியப்பட்டன’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், நஜிப் இது தொடர்பாக கூறுகையில், ‘இந்த சோதனை தேவையற்று என்னை துன்புறுத்துகிறது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் பெரிதாக மதிப்பற்றவை’ என தெரிவித்துள்ளார்.

மேலும், நஜிப் தனது மனைவிக்காக வாங்கிய வைர நகையின் மதிப்பு சுமார் 23 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.