தான் கடவுள் கிருஷ்ணனின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் என்றும் அதனால் தன்னால் இனி வேலைக்கு வர முடியாது என்றும் அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணை புனரமைப்பு பணி அதிகாரியான ரமேஷ் சந்திரா பொஃபர் என்பவர்தான் இந்த பரபரப்புக்கு காரணமானவர்.
பச்சை நிற கையெழுத்திடும் கெசடட் அதிகாரியான ரமேஷ் சந்திரா கடந்த சில மாதங்களாகவே அலுவலகத்திற்கு வருவதில்லை. இதனால் பல பணிகள் பாதித்தன. இதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டிஸிற்கு ரமேஷ் சந்திரா அளித்த பதில் இப்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பதிலில் தான் பகவான் கிருஷ்ணரின் பத்தாவது அவதாரம் என்றும், தான் வீட்டில் இருந்து தவம் செய்து வருவதால் நாட்டில் பல இடங்களில் நல்ல மழை பொழிகிறது என்றும் கூறியுள்ளார். 2010 ஆண்டிலேயே தான் கல்கி அவதாரம் என்பதை உணர்ந்து விட்டதாகவும் அப்போதிருந்தே பல தெய்வ சக்திகள் அவருக்கு கிடைத்துள்ளதாகவும் அந்த பதிலில் அவர் விளக்கமாக கூறியிருக்கிறார்.
கடவுளின் அவதாரமாக இருக்கும் நான் இனி வேலைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்று அதிரடியாக பதில் கூறியிருக்கிறார் ரமேஷ். அதுமட்டுமில்லாமல் அலுவலகத்தில் இருந்து தன்னால் தவம் செய்ய முடிவதில்லை என்றும் அதனால் இனி தான் அலுவலகம் வர போவதில்லை என்றும் கூறியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





