வவுனியாவில் பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் திறந்து வைப்பு!!

268

‘ஊருக்காக காவல்துறை’ எனும் என்னும் தொனிப்பொருளில் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் செயற்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட சமுதாய பொலிஸ் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் நேற்று (21.05) மகாறம்பைக்குளத்தில் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கலந்து கொண்டு, நடமாடும் சேவை நிலையத்தை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் விசேட விருந்தினராக ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் வடமாகாண இணைப்பாளர் ஏபிரகாம் ராகுலன் கலந்துகொண்டிருந்தார்.

ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள மக்களிற்கான பல சேவைகள் ஊருக்காக பொலிஸ் செயற்திட்டத்தின் மூலம் வழங்கப்பட இருக்கின்றன.

அந்தவகையில் இப்பிரதேச மக்களுடைய முறைப்பாடுகள் பெற்றுக்கொள்ளல், கல்வி வளர்ச்சி, கலாசாரம், கிராமத்தின் குறைகள் போன்றவற்றை நிவர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டே குறித்த செயற்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்ந்து ஒருமாதம் குறித்த நடமாடும் சேவை நடைபெற உள்ளதுடன் பொலிஸாரின் வேண்டுகோளிற்கு இணங்க பிரதேச செயலகத்தின் அனுசரணையில் கணவனை பிரிந்த நிலையில் பொருளாதார கஸ்டத்திற்கு மத்தியில் வாழும் 3 பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு வீடு ஒன்றை அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக, பிரதேச செயலாளர் க.உதயராசா, நகரசபை உறுப்பினர்களான க.சுமந்திரன், பா.பிரசன்னா, வவுனியா பொலிஸ் பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி, மதகுருமார்கள், சமுதாய பொலிஸ் குழுவினர், கிராம சேவகர்கள், பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.