ஏ9 வீதியில் முறிகண்டியானுக்கு இந்த நிலைமையா?

603

 

கிளிநொச்சி ஏ9 வீதியில் முறிகண்டி பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் வளாகம் குன்றும் குழியுமாக காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்களின் நடமாட்டம் உள்ள குறித்த பகுதியில் இவ்வாறு ஆலயத்தின் வளாகம் குன்றும் குழியுமாக காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

முறிகண்டி ஆலய வளாகத்தினைச் சுற்றியுள்ள மக்களின் பாவனைக்கான இந்த பகுதி புனரமைக்கப்படாத நிலையில், சேதமடைந்து காணப்படுகின்றது.

குறித்த பகுதியை மக்கள் தமது போக்குவரத்துத் தேவைக்காகவும் பயன்படுத்திவருகின்ற நிலையில் இவ்வாறு இந்த பகுதி சேதமடைந்து காணப்படுவது பொதுமக்கள் மத்தியில் விசனத்தைத் தோற்றுவித்துள்ளது.

அத்துடன், ஆலயத்திற்கு வரும் பக்தர்களும் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், மழைக்காலங்களில் நீர்த்தேங்குவதன் காரணமாக இதர பல சுகாதார சீர்கேடுகளுக்கும் தாம் உட்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறித்த பகுதியின் ஊடாக வேறு இடங்களுக்கு பயணிக்கும் மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இன, மதம் என்பதை மறந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

எனவே, இந்த பகுதி உட்படுத்தப்படும் பிரதேச சபை மற்றும் மாகாண சபை என்பன கவனத்திற்கொண்டு ஆலய வளாகத்தினை செப்பனிட்டுத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.