இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள காலநிலை : எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள மாற்றம்!!

330

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள நிலையில் மழையுடனான காலநிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும், மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும். அதேவேளை ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என்பதுடன், மக்கள் இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மேலும், நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கொழும்பு, களுத்துறை, கேகாலை, குருநாகல், கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் மண்சரிவு, வெள்ளம், இடி மற்றும் மின்னல் தாக்கம், நிலம் தாழிறக்கம், ஆறுகள் பெருக்கெடுப்பு போன்ற அனர்த்தங்கள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.