கதையே இல்லாமல் படம் எடுக்கும் நடிகர் பார்த்திபன்!!

300

Parthibanஇயக்குனரும், நடிகருமான பார்த்திபன் கதையே இல்லாமல் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். தன்னுடைய படங்களில் தலைப்பை வித்தியாசமாக வைக்கும் பார்த்திபன் இந்த படத்திலும் வித்தியாசமான தலைப்பை தேர்வு செய்துள்ளார்.

இவர் இயக்கும் புதிய படத்திற்கு “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்களை 100 ஆண்டு இந்திய சினிமாவுக்கு செலுத்தும் மரியாதை என்ற அறிவிப்போடு வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பார்த்திபன் கலந்து கொண்டு பத்திரிகையாளரிடம் தன்னுடைய புதிய படம் குறித்து விளக்கம் கொடுத்தார்.

இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. பத்திரிகை நண்பர்களும், ஊடக நண்பர்களும்தான் என்னுடைய சிறப்பு விருந்தினர் என விழா தொடக்கத்திலேயே அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

விழாவில் நடிகர் பார்த்திபன் பேசும்போது, இப்படத்தில் பெரிய நடிகர், நடிகைகள் எல்லாம் நடிக்கவில்லை. இப்படத்தில் பணிபுரியும் அனைவருமே புதுமுகங்கள்தான். கதையே இல்லாமல் இந்த படத்தை எடுத்திருக்கிறேன்.

ஒவ்வொரு மனிதனும் நாளை என்ன நடக்கும் என்பதை எதிர்பார்க்காமலேயே தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். அதுபோல் இந்த படத்திலும் கதாபாத்திரங்களின் ஓட்டத்திலேயே கதை நகரும். தமிழ் சினிமாவுக்கு இது ஒரு புது முயற்சியாக இருக்கும் என்று அவர் பேசினார்.

இப்படத்தின் அறிமுகப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். படத்திற்கு மலையாளத்தை சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் இசையமைக்கிறார். இவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெற்ற ஆரோமலே என்ற பாடலை பாடியவர்.