தயாரிப்பாளரும், இயக்குனரும் புருஷன் பொண்டாட்டி என்றால் நடிகர்கள் வைப்பாட்டியா : படவிழாவில் சீரிய ராதாரவி!!

287

Radharaviவேந்தர் புரொடக்ஷன்ஸ் வழங்க மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைத் தம்பி தயாரிக்கும் புதிய படம் உயிருக்கு உயிராக. இப்படத்தில் சஞ்சீவ், சரண்குமார் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகிகளாக நந்தனா, ப்ரீத்திதாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை விஜய மனோஜ்குமார் என்பவர் இயக்குகிறார். ஷாந்தகுமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஓடியோ வெளியீடு நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பாரிவேந்தர், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், நடிகர் சங்க செயலாளர் ராதாரவி, இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, வி.சேகர் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குனர் விக்ரமன் பேசும்போது, ஒரு படம் வெற்றி பெற்றால் அதில் அனைவரும் பங்குகொள்கிறார். ஆனால், தோல்வியடைந்தால் பழி அனைத்தும் இயக்குனர்கள் மேலேயே போட்டுவிடுகிறார்கள். எப்படி தோல்வியடைந்தவுடன் இயக்குனர்கள்தான் பொறுப்பு என்கிறார்களோ, அதேபோல் வெற்றியும் இயக்குனரையே சாரும். ஒருபடத்திற்கு முக்கியமானவர் இயக்குனரே என்று பேசினார்.

அதன்பிறகு பேசவந்த நடிகர் ராதாரவி விக்ரமன் பேச்சுக்கு கிண்டலாக பதிலடி கொடுத்தார். அவர் பேசும்போது..

ஒரு படத்துக்கு ஒரு கண் இயக்குனர், மற்றொரு கண் தயாரிப்பாளர். இதை நடிகர் என்ற முறையில் நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நாங்கள் மட்டுமே முக்கியம் என்று சொல்லக்கூடாது. ஒரு படத்துக்கு எல்லாருமேதான் முக்கியம். சினிமா என்பது மசால் வடை மாதிரி. எல்லாம் சரியா சேர்ந்தாத்தான் நல்லா இருக்கும்.

அதேபோல், ஒரு படம் ஓடாவிட்டால் அந்த பழியை உங்கள்மேல் தான் சுமத்துவோம். ஓடினால் அந்த பெருமையை நாங்கள்தான் எடுத்துக் கொள்வோம். ஒரு ஜனநாயக நாட்டில் இதற்குக்கூட எங்களுக்கு உரிமையில்லையா என்று கிண்டலாக பேசினார்.

மேலும் அவர் பேசும்போது, இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் புருஷன்-பொண்டாட்டி என இந்த படவிழாவில் பேசினார்கள். அப்படியென்றால் நடிகர்கள் யார், வைப்பாட்டியா?. ரசிகர்கள் யாருக்கு ரசிகர் மன்றங்கள் வைக்கிறார்கள். எங்களுக்குத்தானே ரசிகர் மன்றங்கள் வைக்கிறார்கள். உங்களுக்கா வைக்கிறார்கள். நல்ல கருத்துள்ள படங்களை எடுப்பது நல்ல விஷயம்தான்.

என்றாலும் தமிழையே நம்பிக் கொண்டிருக்கும் நடிகர், நடிகைகளையும் உபயோகியுங்கள். அதைச் செய்யாமல் தமிழைக் காப்பாத்தணும், தமிழைக் காப்பாத்துணும் என்று பேசுகிறார்கள். கொள்கைகளை பேசிவிட்டு கொள்கையோடு வாழுங்கள். எவன் ஒருவன் மொழியை காப்பாற்றுகிறானோ அவன்தான் கலாச்சாரத்தை காப்பாற்ற முடியும் என்று அவர் பேசினார்.