வவுனியா நடைபாதை வியாபாரிகளுக்கு நீண்டகாலத் திட்டத்தில் ஒரு நிரந்தர இடம் : நகரசபைத் தலைவர்!!

385

வவுனியாவில் நடைபாதை வியாபாரிகளுக்கு நீண்டகால திட்டத்தில் ஒரு நிரந்தர இடம் ஒதுக்குவது தொடர்பாக கரிசனை கொள்ளப்பட்டுள்ளது என நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையின் இரண்டாவது சபை அமர்வு நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

வவுனியா நகரின் வீதிகளை புனரமைத்தல், வீதி விளக்குகளை திருத்துதல் மற்றும் பொருத்துதல், பெரு மரங்களை நடுதல், பழைய விளையாட்டு மைதானங்களை புனரமைத்தல், புதியவிளையாட்டு மைதானங்களை உருவாக்குதல்,

சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் வகையில் குளங்களை விரிவுபடுத்துதல் மற்றும் அழகு படுத்துதல், பூங்காக்களை விருத்தி செய்தல் மற்றும் வவுனியா வாழ் மக்களுக்குத் தேவையான விடயங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நான் முயற்சித்து வருகிறேன்.

இதற்காக அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள்
ஆகியோரை சந்தித்து வருகின்றேன்.

இவ்வாறு நீண்டகால திட்டம் பற்றிய விடயங்கள் நடைபெற்று வருகின்ற அதேவேளை குறுங்கால திட்டமொன்றை வகுத்து அதுதொடர்பில் அமர்வில் கலந்துரையாடப்பட்டது.

வவுனியா நகரசபையில் காணப்படுகின்ற பாரிய ஆளணி வெற்றிடத்தை நிரப்புவதற்கு சாத்தியமான அத்தனை வழிகளையும் கையாள்வது என்று தீர்மானிக்கப்பட்டதோடு, தொழிலார்களிடம் காணப்படுகின்ற சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து நிரந்தர தீர்வு ஒன்றை எட்டுவதற்கு விசாரணைக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

தெருவிளக்குகள் பொருத்துவத்தற்குரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடி கால்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த மாத இறுதிக்குள் நகரை அண்டிய பகுதிகளில் விசேட வேலைத்திட்டம் ஒன்றின் மூலம் நகரை சுத்தப்படுத்தும் சிரமதானப்பணி திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இராணுவம் பொலிஸ் கடற்படை பாடசாலை சமூகம் பொதுமக்கள் என அனைவரையும் இணைத்துக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நகரசபையின் உள்ளக பிரதேசங்களை துப்பரவு செய்து அழகு படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகம் ஒன்றினை வவுனியாவில் திறப்பதற்கான முடிவும் எட்டப்பட்டது.

சட்ட விரோத விளம்பர காட்சிப்படுத்தல்களுக்குரிய நிதியினை வசூலித்தல் பொருத்தமற்றவற்றை அகற்றுதல் என்பவற்றின் மூலம் அவற்றினை முறைப்படுத்துதல் வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நகரசபை வட்டாரங்களில் காணப்படும் குறைபாடுகளை இனங்கண்டு வரிசைப்படுத்தி முதன்மை அடிப்படையில் நிவர்த்தி செய்வதெனவும் பொது இடங்களில் குப்பைத்தொட்டிகளை நிறுவுதல் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நடைபாதை வியாபாரிகளுக்கு நீண்டகாலத் திட்டத்தில் ஒரு நிரந்தர இடம் ஒதுக்குவது எனவும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் மாதாந்தம் பௌர்ணமி விழாக்களை நடத்துவதுடன் வருடாந்தம் ஒரு பொதுப்பண்பாட்டு நிகழ்வை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.